வெலிக்கடை சிறையில் தாக்கப்பட்ட தமிழ்க் கைதி – பாராளுமன்றத்தில் தெரிவித்த கஜேந்திரன்

வெலிக்கடை சிறையில் 10 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதமிருந்து வந்த முன்னாள் போராளி எனது வேண்டுகோளையேற்று உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ள நிலையில் இன்னொரு தமிழ் கைதி சிறை அதிகாரியால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற பலஸ்தீனத்தின் இனறைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

“நான் வெலிக்கடை சிறைச் சாலைக்கு நேற்று சென்று அங்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் போராளியான அரவிந்தன் என்பவரை சந்தித்தேன். அவர் செய்யாத குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரின் உண்ணாவிரத போராட்டத்தை
நிறுத்துமாறு நான் கேட்டுக்கொண்டதையேற்று அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார். அவர் ஒரு நிரபராதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

அத்துடன் அங்கு தம்பு குணசேகரம் என்ற 65 வயது முதியவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 7 ஆம் திகதி சிறையில் உள்ள மருந்தகத்துக்கு மருந்து எடுக்கச் சென்றபோது சிறை உத்தியோகத்தர் ஒருவரால் “நீ ஏன்
அடிக்கடி மருந்து எடுக்க வருகின்றாய், இங்கு நீ வரக்கூடாது’ எனக் கூறி கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டாா்.