3 எம்.பி.க்களுடன் அமெரிக்க துாதுவா் யாழ்ப்பாணத்தில் பேச்சு – பொது வேட்பாளா் குறித்தும் கேட்டறிந்தாா்

777 3 எம்.பி.க்களுடன் அமெரிக்க துாதுவா் யாழ்ப்பாணத்தில் பேச்சு - பொது வேட்பாளா் குறித்தும் கேட்டறிந்தாா்யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ​செய்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரை நேற்றிரவு சந்தித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் , சார்ள்ஸ் நிர்மலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரை அமெரிக்க தூதுவர் நேற்று சந்தித்துள்ளார்.

வட மாகாண மக்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புக்கூறல் தொடர்பான அவர்களின் கோரிக்கைகள் மற்றும் சிறுபான்மையினரின் குரல்களை உறுதிப்படுத்துவதற்கான அவர்களது முன்மொழிவுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்க தூதுவருடனான சந்திப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று கருத்து தெரிவித்தார். தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான விடயங்களை அமெரிக்க தூதுவர் கேட்டறிந்து கொண்டதாக சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டார்.

முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பகிர்ந்தளிப்பின் போது பெண்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது தொடர்பான விடயங்களையும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கேட்டறிந்து கொண்டதாக சிறிதரன் கூறினார்.