இந்தியாவில் கைதான ஐ.எஸ். அமைப்பினா் தொடா்பான விசாரணைக்கு இலங்கையில் உயா் குழு

91 இந்தியாவில் கைதான ஐ.எஸ். அமைப்பினா் தொடா்பான விசாரணைக்கு இலங்கையில் உயா் குழுஇந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ISIS அமைப்புடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் இலங்கையர்கள் நால்வர் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தென் பகுதியில் இருந்து வரும் அனைத்து பயணிகளின் தகவல்களையும் அடையாளம் காணும் நடவடிக்கையின் கீழ், அஹமதாபாத் விமான நிலையத்தில் குஜராத் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் சென்னையில் இருந்து வருகை தந்த நான்கு பயணிகள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இந்த சந்தேகநபர்கள் நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியை சேர்ந்த 33 வயதான மொஹமட் நுஸ்ரத், கொழும்பு மாளிகாவத்தையை சேர்ந்த 35 வயதான மொஹமட் ஃபாரிஸ், கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த 27 வயதான மொஹமட் நஃப்ரான், கொழும்பு 13 ஐ சேர்ந்த 43 வயதான மொஹமட் ரஷ்டீன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நால்வருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த அபு என்ற நபருடன் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தாக்குதல் நடத்த அபு என்ற நபரால் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் தரப்பினரை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சந்தேகநபர்கள் நால்வரும் தற்கொலைத் தாக்குதலுக்கு தயாராக இருந்ததாகவும், அதற்காக அபு என்ற நபர் தலா 4 இலட்சம் இலங்கை ரூபாவை வழங்கியுள்ளதாகவும் அந்த ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபு என்ற நபர் நான்கு இலங்கையர்களுக்கும் வழங்க தயார் செய்த சில ஆயுதங்களும் விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டன.

இவர்களில், மொஹமட் நஃப்ரான், நீதிபதி சரத் அம்பேபிட்டியவை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான நியாஸ் நௌஃபர் எனும் பொட்ட நௌஃபரின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.