நிழல் அமைச்சரவை ஒன்றை உடன் அமையுங்கள் – பிளவுகளைத் தடுக்க சஜித்துக்கு அழுத்தம்

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகளை இணைத்துக் கொண்டுள்ளமையால் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் நிழல் அமைச்சரவையை பெயரிடுவதற்கான அழுத்தங்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றால், யாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பதை சஜித் பிரேமதாச வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று சஜித் பிரேமதாசவுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவராக செயற்படும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ள அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கும் தீர்மானித்துள்ளார்.

இந்நிலையில் அவருடன் இணைந்து பலரும் வெளியேறும் நிலை காணப்படுவதால் அதற்கு முன்பாக நிழல் அமைச்சரவையை பெயரிடுவதற்கான அழுத்தங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்பாக பொதுத் தேர்தல் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுவதால் கட்சி வெற்றி பெறும்பட்சத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதில் நிலவும் போட்டித்தன்மையை சமாளிக்கும் வகையிலும் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவை சமாளிக்கும் வகையிலும் நிழல் அமைச்சரவையை உருவாக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிழல் அமைச்சரவையில் அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்பவர்களே எதிர்காலத்திலும் அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று தங்களுடைய அமைச்சுப் பதவிகளை இலக்குவைத்து வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இவ்வாறான நிலையில் பொதுத் தேர்தல் இடம்பெற்று சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிபெறுமாயின் அமைச்சரவையை உருவாக்குவதில் கடும் நெருக்கடிகள் ஏற்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.