பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளா் யாா் என்பதை அறிவியுங்கள் – கட்சிக்குள் அதிகரிக்கும் அழுத்தம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உடனடியாக அறிவிப்பை வெளியிடுமாறும் அல்லது பொதுஜன பெரமுன எந்த வேட்பாளருக்கு ஆதரவளிக்கப் போகின்றது என்பதை உடனடியாக வெளிப்படுத்துமாறும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடாமையால் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குழப்பமடைந்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன தங்களது வேட்பாளர் தொடர்பில் அறிவிப்பை வெளியிட்டு தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பதாகவும் இது எதிர்கால தேர்தல் நடவடிக்கையில் பின்னடைவை ஏற்படுத்துமென்பதால் உடனடியாக வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் பிரசன்ன ரணதுங்க நேரடியாக தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடாமையால் இது தொடர்பில் தீர்மானிக்க முடியாதென ஏனைய உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு தனது முடிவை அறிவிக்காவிட்டாலும் தங்களுக்கு அறிவிக்க வேண்டுமென அங்கு  வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் போட்டியிடவுள்ளதாகவும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தற்போது அறிவிப்பை வெளியிட்டால் எவ்வித வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது என்பதாலேயே தீர்மானம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தீர்மானத்தை அறிவிக்கும் வரையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தங்களது ஆதரவு தொடர்பில் எவ்வித அறிவித்தலையும் வெளியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.