இரண்டு தோ்தல்களையும் இரண்டு வருடங்களுக்குப் பின்போட வேண்டும் – ஐ.தே.க. யோசனை

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு நாடாளுமன்றில் யோசனைத் திட்டத்தை முன்வைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்துரைத்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டெழுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் பல அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலான
வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் கல்வித்துறை, பொதுச் சேவைகள் என்பன சுமூகமாக நடைபெற்றுவருகின்றன” என்று தெரிவித்தாா்.

“நாட்டில் இவ்வாறான ஒரு ஸ்திரதன்மை ஏற்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலோ அல்லது பொதுத்தேர்தலோ நாட்டின் தற்போதைய தேவை கிடையாது. நாடாளுமன்றில் அனைவரும் ஒன்றிணைந்து, குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இந்த யோசனைத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்” என்றும் ஐ.தே.க. பொதுச் செயலாளா் தெரிவித்தாா்.

”அநுரகுமார திசாநாயக்க இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைத்து தரப்பினரும் இணைந்து ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தை குறைந்தது 2 வருடங்களுக்காவது நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலையும் 2 வருடங்களுக்குப் பிற்போடுமாறு யோசனை முன்வைக்கின்றேன். கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாட்டை கடன் சுமையில் இருந்து விடுவிப்பதற்கும் நாட்டை பொருளாதார மீட்சிப்பாதைக்கு கொண்டு செல்வதற்கான இயலுமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமே காணப்படுகின்றது” என்றும் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டார்.