இந்த அரசாங்கமும் உண்மைகளை மறைக்க முயல்கிறது – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்ற தனது மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் கோரிக்கையை அதிகாரிகள் புறக்கணித்தாலும், தனது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும், போராட்டத்தை புதுப்பித்து நீதிக்காக போராடுவேன் என்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைத் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் 5 வருடங்களுக்குப் பின்னர் உயிரிழந்த தாயாருக்கு அஞ்சலி செலுத்திய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆட்சியில் இருப்பவர்கள் உண்மையை வெளிப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டு அதையெல்லாம் தலையணைக்கு அடியில் மறைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆட்சியிலுள்ள கட்சியும் அவர்களது தலைவர்களும் பல வருடங்களாக இந்நாட்டில் நடந்த கொலைகள், காணாமல் போதல்களுக்குப் பொறுப்பேற்காமல் அனைத்தையும் மணலுக்கு அடியில் மறைத்துக் கொண்டிருப்பவர்கள். அதனால் அவர்களிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது. இது 5 வருடங்களாக நாம் பார்த்த ஒன்று. எங்களின் கோரிக்கைகள் ஒரு நொடி கூட கணக்கில் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

எனவே, இது போன்ற சந்தர்ப்பங்களில் இவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியை நினைத்து நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். இந்த நேரத்தில், இதைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்த எங்கள் போராட்டத்தை மீண்டும் புதுப்பிக்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.