விமல் – கம்மன்பில – திலித்தின் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் கிழக்கு ஆளுநர்

anuratha விமல் - கம்மன்பில - திலித்தின் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் கிழக்கு ஆளுநர்விமல் கம்மன்பில திலித் ஆகியோரின் புதிய கூட்டணியான சர்வஜன பலயவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் போட்டியிடவுள்ளதாகவும் அவர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், சந்திரிகாவுக்கு அடுத்தபடியாக பலம் பொருந்திய வேட்பாளராக இருப்பாரெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய கூட்டணிகள் பல உருவாகிவரும் நிலையில், கடந்த வாரம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர மற்றும் சன்ன ஜயசுமன உள்ளிட்ட பலர் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியிருந்தனர்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் விமல் வீரவன்ச வேட்பாளராக களமிறங்கத் தயார் என அரசியல் களத்தில் பல்வேறு கதைகள் பேசப்பட்ட நிலையில், விமல் வீரவன்ச மற்றும் திலித் ஜயவீர ஆகியோருக்கு பதிலாக இந்தக் கூட்டணியில் இருந்து புதிய ஜனாதிபதி வேட்பாளரை முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட திருமதி அனுராதா யஹம்பத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாவை ஆட்சிக்குக் கொண்டு வந்த வியத்மக குழுவில் அனுராதா பலம் பொருந்தியவராகவும் சிங்களபௌத்த சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் என்றும் அறியப்படுகிறார். இவர் கோட்டாபய ராஜபக்சவுடன் நெருக்கமாகப் பணியாற்றியவர் என்றும் அப்போது அறியப்பட்டார்.

எவ்வாறாயினும், புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பான கலந்துரையாடலில் ஆரம்பத்தில் இரண்டு பெயர்கள் முன்வைக்கப்பட்டன. அனுராதா யஹம்பத் மற்றும் சீதா அரம்பேபொல ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் சீதா அரம்பேபொல தற்போது ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயற்படும் இராஜாங்க அமைச்சராக அறியப்படுவதாலும் அமைச்சருக்கான சிறப்புரிமைகள் கோரி அனுப்பப்பட்ட கடிதத்தில் அவர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாலும் இறுதியாக அனுராதா யஹம்பத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தல் போன்ற முக்கியமான போரில் அனுராதா யஹம்பத் போன்ற ஒரு பாத்திரத்தை கொண்டு வருவது மிகவும் நல்ல தெரிவு என்று கூட்டணி கருதுவதாகவும் இவர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத சிங்களபௌத்த பின்னணியைக் கொண்டவராக இருப்பதாகவும் இதன்படி, அவர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், சந்திரிகாவுக்கு அடுத்தபடியாக பலம் பொருந்திய வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார் எனவும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த புதிய கூட்டணிக்குள் சிங்கள பௌத்த சக்திகளை அணிதிரட்ட ஒரு பெரிய பிரசாரத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னெடுத்ததாகவும் கடந்த காலங்களில் அவர் நேரடி அரசியலில் ஈடுபடாத நிலையிலும் இந்தக் கூட்டணிக்காக கட்சிகளை ஒன்றிணைத்ததில் அவருக்கு பெரும் பங்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் கடமையாற்றிய போது தமிழ் பிரதேசங்களில் சட்டவிரோத சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்த விகாரைகள் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுத்தமையால் தமிழ் தரப்பினரின் கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.