ரஷ்ய இராணுவத்தின் ஒரு பகுதியாகவே இலங்கையின் முன்னாள் படையினா் உள்ளனா்

14 ரஷ்ய இராணுவத்தின் ஒரு பகுதியாகவே இலங்கையின் முன்னாள் படையினா் உள்ளனா்ரஷ்ய அதிகாரிகளிற்கும் மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகத்தின் இராஜதந்திரிகள் சிலருக்கும் இடையில் வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது ரஷ்யாவில் இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் ரஷ்ய இராணுவத்தின் ஒரு பகுதியாகவே போரிடுகின்றனர் என்ற விடயம் தெரியவந்துள்ளது.

இலங்கையின் முன்னாள் படைவீரர்களை ரஷ்ய இராணுவமே தனது படையணிகளில் இணைத்துக்கொண்டுள்ளது. வாக்னர் குழுக்கள் போன்றவை அவர்களை சேர்க்கவில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது. தங்கள் படையணிகளில் முன்னாள் இலங்கை படைவீரர்கள் உள்ளதையும் அவர்கள் போரில் ஈடுபட்டுள்ளதையும் ரஷ்ய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் எனவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஷ்ய இராணுவத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் அதனை பின்பற்றவேண்டும். இதன்காரணமாக முன்னாள் படைவீரர்கள் தாங்கள் நினைத்த நேரத்தில் அங்கிருந்து வெளியேற முடியாது. ரஷ்யாவின் இராணுவத்தின் கட்டளை பீடங்களே அதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்றும் இந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் ரஷ்ய படைப்பிரிவின் ஒருபகுதியாக செயற்படுகின்றனரா என்பதை அறிவதற்காகவே மொஸ்கோ சந்திப்பை இலங்கை பயன்படுத்தும் என தெரிவித்திருந்தார்.

அவர்களை போர் முன்னரங்கிலிருந்து அகற்ற முடியுமா என்பது குறித்து ஆராய்வதற்காகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அறிவதற்காகவும் காயமடைந்தவர்களை மீள இலங்கைக்கு அழைக்க முடியுமா என ஆராயவும் இந்த சந்திப்பை இலங்கை பயன்படுத்தவுள்ளது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.