சீரற்ற காலநிலையால் 85 ஆயிரம் போ் பாதிப்பு – 16 போ் உயிரிழப்பு! 3 பேரை காணவில்லை!

9 சீரற்ற காலநிலையால் 85 ஆயிரம் போ் பாதிப்பு - 16 போ் உயிரிழப்பு! 3 பேரை காணவில்லை!நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை சீரற்ற காலநிலையால் 8 மாவட்டங்களில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 85 ஆயிரம் பேர் வரையிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, அம்பாந்தோட்டை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் மொத்தமாக 1214 வீடுகள் பகுதியளவிலும், 9 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. இதேவேளை பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 10ஆயிரம் பேர் வரையிலானோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் காணாமல் போயுள்ளதாகஅனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் 6 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 4 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 4 பேரும் காலி மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளதுடன், காலி மாவட்டத்தில் ஒருவரும் பேரும் மாத்தறை மாவட்டத்தில் 2 பேரும் காணாமல்போயுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் களனி, களுகங்கை மற்றும் நில்வலா கங்களை அண்மித்த பிரதேசங்களிலேயே அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் மாவட்ட அரசாங்க அதிபர்களின் ஊடாக வழங்கப்படுவதுடன், மேலும் அனர்த்தங்கள் ஏற்படலாம் என்று அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் மீட்புக் குழுக்களை தயார்படுத்தியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.