கூலிப்படைகளாக ரஷ்யா சென்ற 220 இலங்கையா்களின் விபரம் துாதரகத்திடம் ஒப்படைப்பு

vasantha yappa கூலிப்படைகளாக ரஷ்யா சென்ற 220 இலங்கையா்களின் விபரம் துாதரகத்திடம் ஒப்படைப்புகூலிப்படையினராக 1000 இலங்கையர்கள் ரஷ்யாவுக்கு சென்றிருக்கலாம். 220 பேர் தொடர்பான தகவல்களை ரஷ்ய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளோம் என்று சுயாதீன எதிரணி நாடாளுமன்ற உறுப்பினா் வசந்த யாப்பா பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசேட கூற்றை முன்வைத்த போதே இதனைத் தெரிவித்தாா்.

அவர் மேலும் கூறுகையில், “மியன்மார் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு சென்று அங்கு நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதற்கும்,அவர்களின் விடயத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பது தொடர்பிலும் ஆராயுமாறு எதிர்ககட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எமக்கு ஆலோசனை வழங்கினார். இதற்கமைய எதிர்க்கட்சியின் உறுப்பினர்களான ஜே .சி.அலவத்துவெல,சுஜித் சஞ்சய் பெரோ உட்பட நானும் அண்மையில் மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று பல்வேறு தரப்பினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டோம்” என்று தெரிவித்தாா்.

“தாய்லாந்து நாட்டில் உள்ள விசேட புலனாய்வு திணைக்களம் ஊடாக அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தால் மியன்மாரில் சைபர் குற்றங்கங்களில் ஈடுபடும் தரப்பினரிடம் அகப்பட்டுள்ள 49 இலங்கையளர்களை பாதுகாப்பான முறையில் மீட்க முடியும். நேபாளம், உகண்டா ஆகிய நாடுகள் இந்த விசேட புலனாய்வு திணைக்களத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தமது நாட்டவர்களை காப்பாற்றியுள்ளன. ஆகவே இவ்விடயம் குறித்து வெளிவிவகாரத்துறை அமைச்சு விசேட கவனம் செலுத்தி, துரிதகரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க
வேண்டும்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினா் வசந்த யாப்பா பண்டார வலியுறுத்தினாா்.

ரஷ்யா உக்ரைன் மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில் சுமார் 1000 இலங்கையர்கள் ரஷ்யாவுக்கு சென்றிருக்கலாம்.220 பேர் தொடர்பான தகவல்களை ரஷ்ய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளோம். இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நல்லுறவு காணப்படுகிறது. ஆகவே சேவை ஒப்பந்தமில்லாமல் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்து பொது இணக்கப்பாட்டுக்கு வர முடியும்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினா் வசந்த யாப்பா பண்டார தெரிவித்தாா்.