பொலிஸாரின் அராஜகம் தொடா்ந்தும் அதிகரிப்பு – கஜேந்திரன் சபையில் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் – வடக்கு, கிழக்கில் பொலிஸாரின் அராஜகங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளன. குற்றங்களில் ஈடுபடும் பொலிஸார்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இது விடயத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தலையிட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரன் எம். பி. தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக் கிழமை உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு,

“கடந்த 2023 நவம்பர் 19ஆம் திகதி ஓர் இளைஞர் வட்டுக்கோட்டை பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். அவருடைய கொலை தொடர்பாக 4 பொலிஸார் கைது செய்யப் பட்டபோதிலும் கூட அந்த சித்திரவதைகள் நடைபெற்ற நான்கு நாட்களும் அங்கிருந்த வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மீது இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கவனம் செலுத்தாமல் இருப்பது ஏன்?

இது விடயத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். செவ்வாய்க்கிழமை பொன்னாலை பகுதியில் கிருஷ்ணவேணி என்ற ஒரு பெண் தலைமை குடும்பத்தை சேர்ந்த பெண் தனது வளவில் குழாய் கிணறை அமைத்தபோது, அங்கு சென்ற வட்டுக்கோட்டை பொலிஸார், அதற்கான அனுமதி பெறப்படவில்லை என்பதை காரணம் காட்டி அவரிடம் இருந்து 8 ஆயிரம் ரூபாயை கப்பமாக பெற்று சென்றுள்ளனர். அந்தத் தாயின் மகன் க.பொ. த. உயர்தரத்தில் படித்துக் கொண்டிருக்கிறார். பாடசாலை தவிர்ந்த நேரத்தில் கூலி வேலை செய்து அதில் சேமித்த பணத்தில்தான் குழாய் கிணறை அமைத்தார்கள். அந்தப் பணத்தில்தான் 8 ஆயிரம் ரூபாயை 3 பொலிஸார் பிடுங்கிச் சென்றனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கஜேந்திரன் தெரிவித்தாா்.