ஜனாதிபதி ரணிலும் சஜித்தும் விரைவில் சந்திப்பு? – இணைப்பதற்கான முயற்சிகள் முக்கியமான கட்டத்தில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் விரைவில் சந்தித்துப் பேச்சு நடத்துவர் என்று தெரிய வருகின்றது. இதற்கான ஏற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அறிய வருகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் கூட்டணியாக சந்திப்பது தொடர்பில் பூர்வாங்க பேச்சுகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன. இது குறித்த பேச்சுகள் சிங்கப்பூரில் முன்னெடுக்கப்படுகின்றன என்று ஏற்கனவே கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் அடிபட்டன.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் முன்னெடுக்கப்படும் பேச்சு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் ரவி கருணாநாயக்கா, அந்தக் கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்களுடனான பேச்சு நடத்தப்படுகிறது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் சந்தித்துப் பேசவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் இதன்போது, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கு சஜித் பிரேமதாச ஆதரவளிக்க வேண்டும். பதிலுக்கு சஜித் பிரேமதாஸவுக்கு பிரதமர் பதவியை வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.