இந்திய பிரதமர் மோடியை இலங்கை வருமாறு ஜனாதிபதி ரணில் நேரில் அழைப்பு விடுப்பார்

இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுப்பார் என்று தெரிய வருகின்றது.

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கிறார். இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதுடில்லி செல்கிறார். இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புது டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட இந்திய அரசின் உயர்மட்டத்தினர் பலரை சந்தித்து பேசவுள்ளார்.

இதன்போது, இந்தியா – இலங்கை நாடுகளிடையே பேச்சுகளில் எட்டப்பட்ட திட்டங்களை – குறிப்பாக, இரு நாடுகளையும் தரைவழியாக இணைப்பதற்கான பாலம் அமைக்கும் திட்டத்தை விரைவாக முன்னெடுக்குமாறு இந்திய
பிரதமரிடம் ஜனாதிபதி ரணில் கோரிக்கை விடுப்பார்.

அத்துடன், இந்திய பிரதமரை இலங்கைக்கு வருகை தருமாறும் அவர் அழைப்பு விடுப்பார் என்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியப் பிரதமராக மூன்றவது தடவையாகவும் பதவியேற்கவுள்ள மோடியை இரு தினங்களுக்கு முன்னா் தொடா்புகொண்ட ஜனாதிபதி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தாா். இதன்போது, தனது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணிலுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.