புதிய அரசமைப்பின் மூலம் தீா்வு காணப்படும் வரை மாகாண சபை முறை தொடரும் – தமிழரசுக் கட்சியிடம் அநுரகுமார உறுதி

7 1 புதிய அரசமைப்பின் மூலம் தீா்வு காணப்படும் வரை மாகாண சபை முறை தொடரும் - தமிழரசுக் கட்சியிடம் அநுரகுமார உறுதி“தேசிய இனப்பிரச்னைக்கு புதிய அரசமைப்பு மூலமே தீர்வு காணப்படவேண்டும். அதுவரையில் மாகாண சபை முறைமையை – அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறையாக்கம் செய்வோம்” என்று இலங்கை
தமிழ் அரசு கட்சியினரிடம் கூறியுள்ளார் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க.

யாழ்ப்பாணம் வந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க தலைமையிலான குழுவினர் நேற்று
தமிழ் அரசு கட்சியினரை தமிழ் அரசின் தலைமை பணிமனையில் சந்தித்து பேசினர்.

இதில், மாகாண சபை முறைமையை நாங்கள் முன்னர் ஏற்காவிடினும் தமிழ் மக்கள் விரும்புகின்றனர். இதனால், நாம்அதனை ஏற்றுள்ளோம். 2019 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனைத் தெரிவித்துள்ளோம். தேசிய இனப் பிரச்னைக்கு 13ஆவது திருத்தம் தீர்வாகாது என்று தமிழர் தரப்பு கூறுவதைப் போலவே, அது தீர்வு அல்ல என்பதைத் நாங்களும் ஏற்றுள்ளோம்.

இனப்பிரச்னைக்குத் தீர்வு புதிய அரசமைப்பு மூலமே எட்டப்பட வேண்டும். அதுவரையில் மாகாண சபை முறைமை நீடிக்கவேண்டும். தாமதிக்காமல் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். 13 ஆம் திருத்தம் மூலம் அரசமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ஏற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என்றும் அநுரகுமார கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெளியாகும் தேர்தல் விஞ்ஞாபனத்தை பொறுத்து தமிழ் அரசு கட்சி தனது ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் என்று இந்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், நேற்றைய சந்திப்பில் அநுரகுமார ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாக ஆதரவை கோரவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. நேற்றைய சந்திப்பில் தமிழ் அரசு கட்சி சார்பில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம், சேவியர் குலநாயகம் ஆகியோரும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அநுரகுமார திஸநாயக்கவுடன் பிமல் ரட்நாயக்க, இ. சந்திரசேகரன் ஆகியோரும் பங்கேற்றனர்.