உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது – நாடாளுமன்றத்தில் அறிவித்தாா் ஜனாதிபதி

பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம் என்பதால் இந்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது. எனவே அது குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்த பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே இதனைத் தெரிவித்தாா் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் மேலும் கூறுகையில், “உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பின் 4 ஆவது சரத்தின் கீழ் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை மீறுகிறது. அத்துடன் பாலின சமத்துவ சட்டமூலமானது எந்த தேசிய
கொள்கையைக் குறிக்கிறது என நீதிமன்றங்கள் கேள்வி எழுப்புகின்றன. இது 2011 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரம் பற்றிய தேசியக் கொள்கையைக் குறிக்கிறது. அத்துடன் பெண்களின் உரிமைகள் தொடர்பான சர்வதேச மரபுகளைக் கடைப்பிடிப்பது அனைத்து அரசாங்கங்களின் கடமை . இது இலங்கை நடைமுறைப்படுத்த இணங்கிய நிலையான அபிவிருத்திக் கொள்கைகளுக்கும் இணங்குவதாகவும் உள்ளது.

பாலின சமத்துவச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்ட பிரிவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பத்து நீதிபதிகள் கொண்டு வழங்கிய தீர்ப்பு உட்பட சில தீர்ப்புகளை அது புறக்கணித்துள்ளது. குற்றவியல் சட்டத்தில் பிரதம நீதியரசர் செய்த திருத்தத்தையும் நீதிமன்றம் புறக்கணித்துள்ளது. இந்தத் தீர்ப்பு வழங்கப்பட முன்னர் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை” என்றும் ஜனாதிபதி தெரிவித்தாா்.