நீதிமன்றத் தீா்ப்புக்கு சவால்விட்டு ஜனாதிபதி உரையாற்றுவதை ஏற்க முடியாது – அதுரலியே ரத்ன தேரர்

நீதிமன்றத் தீர்ப்புக்கு சவால் விடும் வகையில் ஜனாதிபதி கருத்து வெளியிடுவது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் உரை தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டு உரையாற்றும் போதே ரதனதேரர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில், “உயர்நீதிமன்றத்தினால் பெண்கள் உரிமைகள் தொடர்பில் வழங்கிய தீர்ப்பு குறித்து தான் மகிழ்ச்சியடையவில்லை என்று ஜனாதிபதி கூறியுள்ளார். ஜனாதிபதி தனி நபராக பாராளுமன்றத்திற்கு வந்தாலும் அவர் கூறுவது யாருடைய நிலைப்பாடு. அரசாங்கத்தின் நிலைப்பாடா? அல்லது நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில் அவரின் நிலைப்பாடா? உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் ஏதாவது தவறுகள் இருந்தால் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளை அழைத்து நியாயமான விடயங்கள் தொடர்பில், உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் கருத்தை கூறி, அங்கு எடுக்கப்பட்ட கூட்டுத் தீர்மானத்திற்கமைய பாராளுமன்றத்தில் கூறியிருக்கலாம்.

பாலின உரிமைகள் தொடர்பில் உலகில் ஒவ்வொரு வகையில் உள்ளது. பௌத்த நாடென்ற வகையில் பாலினம் சம உரிமைகள் தொடர்பில் ஏற்றுக்கொண்டுள்ளோம். எனினும் எமது நாட்டில் பாலினம் தொடர்பில் மேற்குலகில் உள்ளதைப் போன்று வேறு நிலைப்பாடுகளில் இல்லை. இந்நிலையில் ஜனாதிபதி நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தொடர்பில் விமர்சனம் செய்வது சிக்கலுக்குரியது. இது போன்று வேறு விடயங்களில் தனி நபர் என்ற ரீதியில் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா? இல்லையா? என்ற விடயத்திலும், பாராளுமன்ற பதவிக் காலத்தை நீடிக்கும் விடயத்திலும் இவ்வாறு ஜனாதிபதி கதைக்கப்போனால் தவறானமுன்மாதிரியாகவே அமையும் என்றார்.