யாழ்ப்பாணத்தில் இழுவை மடி வலைத் தொழிலுக்கு அனுமதி உள்ளதா? சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் கேள்வி

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை, பொலிகண்டி என்ற இடத்தில் அதிகளவான மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். என்றாலும் மீன்பிடி படகுகளுக்கு நங்கூரமிடும் வசதிகள் சரியாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த இடத்தின் ஆழம் தோண்டி மீன்பிடி படகுகளை நங்கூரமிடுவதற்குக்கான வசதிகள் செய்து தரப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனவே இவ்விடயம் தொடர்பில் பொறுப்பான அமைச்சர் கவனம் செலுத்தி குறித்த பணிகளை துரிதமாக முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.

2017 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதன் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் இழுவை மடி (bottom trawling) மூலம் மீன்பிடியில் ஈடுபடுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் மீன் வளத்திற்கும், கடற் சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் நிலைமைகள் ஏற்படுகின்றன.

நாட்டின் ஏனைய பகுதிகளில் இழுவை மடி ஐ நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், யாழ்ப்பாணத்தில் இது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடற்றொழில் திணைக்களம் மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு அறிவித்தாலும் இதற்கு தீர்வு காணப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இழுவை மடி மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார். இது குறித்து மீன்பீடித்துறை அதிகாரிகள் மௌனம் காப்பது ஏன் என்ற பிரச்சினையும் எழுகிறது. அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருக்குமானால் அது கடற்றொழில் சட்டத்தை மீறிய செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.