ஜே. ஆர் வழியில் ரணில், இந்திய வழியில் ஈழத்தமிழரசியல்வாதிகள் ஈழமக்கள் இறைமையை இருப்பின் வழி உறுதிப்படுத்த பொது வேட்பாளர் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 292

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களின் சிறிலங்காவுக்கான யூன் 20ம் திகதிய வருகை மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுள்ள மாண்பமை நரேந்திரமோடி அவர்களின் பாரத் சிறிலங்கா கூட்டாண்மை அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கு இலங்கைத் தீவில் தடையின்றித் தொடரும் என்பதை உலகுக்குத் தெளிவாக்கியுள்ளது. அதுவும் சிறிலங்காவில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகளைச் சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவும், இந்திய வெளிவவிகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரும் தங்கள் தங்கள் நாட்டு இறைமைகளின் பிரதிநிதிகளாக இணைந்து மெய்நிகர் வழி தொடக்கி வைத்தது, சிறிலங்காவினதும் இந்தியாவினதும் பொருளாதாரக் கூட்டு என்பது இருநாடுகளினதும் இறைமையிலும் கூட்டாண்மையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் 6 மில்லியன் நிதிஉதவியில் அமைக்கப்பட்ட சமுத்திர மீட்பு தொடர்பாடல் மையம் கொழும்பில் கடற்படைத் தலைமையகத்தில் தலைமை மையத்தையும், துணை மையத்தை அம்பாந்தோட்டையிலும் மற்றும் காலி, அறுகம்பே, மட்டக்களப்பு, திருகோணமலை, கல்லாறு, பருத்தித்துறை, மொல்லிக்குளம் ஆகிய பிரதேசங்களில் ஆளில்லாக் கட்டுப்பாட்டு மையங்களையும் கொண்டதாக முழுஅளவில் சிறிலங்காவின் கடற் பரப்பை உள்ளடக்கியதாகக் கட்டமைவுற்றுள்ளதும் இதனை சிறிலங்காவின் ஜனாதிபதியும் இந்திய வெளிவிகார அமைச்சரும் இணைந்து மெய்நிகர் வழி திறந்து வைத்ததும், பாரத் சிறிலங்கா கூட்டாண்மையின் நோக்கு, இருநாடுகளது பாதுகாப்பு என்பதையும் போக்கு, வேறுநாடுகள் இலங்கையில் மேலாண்மை பெறாது தடுப்பது என்பதையும் தெளிவாக்கியுள்ளது. இந்தியாவின் இந்த இராணுவ சந்தை நல அக்கறையில் சிறிலங்காவால் இனஅழிப்புக்கு உள்ளாகும், இலங்கைத் தீவின் இறைமையுள்ள மக்களினமான ஈழத்தமிழரைச் சிறிலங்காவும் இந்தியாவும் வெறுமனே சிங்கள பௌத்த நாட்டில் வாழும் ஒரு சமுகம் என புதிய வரைவினை வகுத்து ஈழத்தமிழரின் தேசிய பிரச்சினை அவர்களது வரலாற்றுத் தாயகத்தில் அவர்களின் பாதுகாப்பான அமைதியான வாழ்வையும் வளர்ச்சிகளையும் உலகு உறுதி செய்ய வேண்டும் என்ற ஈழத்தமிழரின் வெளியகதன்னாட்சி உரிமைக் கோரிக்கை என்பதைத் திசைமாற்றுகின்றன என்பது இலக்கின் கருத்து. இதுவே இனஅழிப்புக்கான தண்டனை நீதியைச் சிறிலங்காவும் பரிகார நீதியை ஈழத்தமிழரும் பெற இயலாமல் இருப்பதன் முக்கிய காரணியாகவும் உள்ளது. மேலும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த உத்தியோகபூர்வ வருகையின் பொழுது அவர் சிறிலங்காவின் ஜனாதிபதி, சிறிலங்காவின் பிரதமர், சிறிலங்காவின் எதிர்க்கட்சியினர், மலையக மக்களின் பிரதிநிதிகள், ஈழத்தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என எல்லோரையும் சந்தித்து அவர்களுடன் பேசியமை பாரத் சிறிலங்கா கூட்டாண்மை சிறிலங்காவின் அரசியல் செல்நெறியை நிர்ணயிக்கும் ஆற்றலாகவும் வளர்ச்சி பெற்றுள்ளமையையும் உலகுக்குத் தெளிவாக்கியுள்ளது.
வலுசக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி, எல் என். ஜி என்னும் திரவ இயற்கை எரிவாயு வழங்கல்கள், தரைவழி கடல்வழி பெற்றோலியக் குழாய்த் திட்டங்கள், இவற்றுக்கான ஆய்வுத் திட்டங்கள், சம்பூர் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து பிரதமர் மோடி அவர்களின் வருகையின் பொழுது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல், திருகோணமலை காங்கேசன்துறை துறைமுக வளர்ச்சித் திட்டங்கள், யாழ் மற்றும் இரத்மலானை விமான நிலைய வளர்ச்சிகள் போன்ற திட்டங்கள் பலவும் பாரத் சிறிலங்கா கூட்டாண்மையால் இருநாடுகளின் இறைமைப் பகிர்வை உள்ளடக்கியதாகப் புதிய பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளமையை இந்திய வெளிவவிகார அமைச்சரின் வருகை உறுதிப்படுத்தியுள்ளது. ஆயினும் இந்தத் திட்டங்களில் ஈழத்தமிழர்களின் தாயக நில-கடல் பரப்புக்களும் மனிதவலுவும் நாளாந்த வாழ்வியல் ஆதாரங்களுமே பகிரப்படுகின்றமை நடைமுறையாக உள்ளது. இந் நிலையில் “தமிழ் மக்கள் இந்தியாவின் பாதுகாப்பு அரணாக இருப்பர். தமிழ் மக்களுக்கு இந்தியத் தலையீடு முக்கியம்” என்னும் கோரிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் பொழுது கோரிக்கையாக முன்வைத்ததுமல்லாமல் “இந்திய சிறிலங்கா ஒப்பந்தம் அரசியல் ரீதியாக கையாளப்பட வேண்டும். அதன் வழி உருவாக்கப்பட்ட 13வது திருத்தம் சட்ட ரீதியாகக் கையாளப்பட வேண்டும். இவை குறித்து தாங்கள் அமைச்சர் அவர்களின் கீழுள்ள சவுத் பிளாக்குக்கு டில்லிக்கு வந்து உரையாட ஏற்பாடு செய்து தரும்படி” கேட்டதன் முக்கியத்துவத்தை அமைச்சர் அவர்கள் கவனத்தில் எடுத்தல் முக்கியம் என்பது இலக்கின் எண்ணமாக உள்ளது. மேலும் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் அதன் உறுப்பினர் விமல் வீரவன்ச சிறிலங்காவின் ஆட்பதிவுத் திணைக்களத்தின் தரவுக் கட்டமைப்புக்களை இந்தியாவுக்கு வழங்கல், அதானி குழுமத்துக்கு மின்கட்டமைப்பை வழங்கல் உள்ளிட்ட செயற்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே இந்திய வெளி விவகார அமைச்சரின் வருகை அமைந்துள்ளதெனவும், உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் எனக் கோரினார். இதற்குப் பதிலளித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவர்கள் “இந்தியாவைத் தவிர்ந்து எந்தவொரு நாடும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையில் தலையிட முடியாது. இந்தியாவுக்குத் தான் முதலிடம் வழங்க வேண்டும். இந்தியாவை மீறி இங்கு எதுவும் அசையாது அதுதான் உண்மை. யதார்த்தம். இதனை விமல் வீரவன்ச போன்ற இனவாதச் சிந்தனையுடையவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரன், வினோ நோகராதலிங்கம் போன்றோரின் கருத்துக்கள் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் இந்திய வழியில் தீர்வை எதிர்பார்ப்பதை உறுதி செய்துள்ளது. ஆயினும் இந்தியா இதுவரை ஈழத்தமிழர்களின் இறைமையின் அடிப்படையில் எதனையுமே தீர்வாக வெளிப்படுத்தவில்லை என்பது வரலாறு. அதே வேளை அமைச்சருடனான சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் தேசிய மக்கள் சத்தியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க தன்னிடம் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தாயராக உள்ளதாகக் கூறிய பொழுது அமைச்சர் அவர்கள் குறுக்கிட்டு “காணி பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடங்கலாகவா? எனக் கேள்வி எழுப்பிய பொழுது சுமந்திரன் எம். பி அவர்கள் “ஆம்” எனக் கூறியமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. யாழ்ப்பாணத்தில் இருந்து திரும்பியதுமே சஜித் சிங்கள மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே தான் அதனைச் செய்வதாகச் சொல்லை மாற்றியதும், அநுரகுமார திசநாயக்கா இலண்டன் சிலோவில் தெளிவாக “தற்போது நடைமுறையில் உள்ள மாகாணசபைகளையே தாங்கள் அனுமதிப்போம்” எனவும் கூறியமையை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் அறியவில்லையா என்பதே அந்த ஆச்சரியத்துக்கான அடிப்படை. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றோர் சிறிலங்காவின் உள்ளக பொறிமுறைகளுக்குள் ரணிலின் வழியில் தீர்வு பெறுவதில் இன்னமும் நம்பிக்கை உடையவர்களாக முயற்சிக்கின்றார்கள். ஆனால் ரணிலோ, ஜே. ஆரின் வழியில் ஈழத்தமிழர்களுக்குச் செய்யும் அத்தனை இனஅழிப்புச் செயற்பாடுகளையும் சட்டமாக்கி சட்டத்தின் நடைமுறைப்படுத்தல் என்கிற நியாயப்படுத்தல் ஊடாக உலகின் அனைத்துலகச் சட்டங்களில் இருந்து தப்பிச் செயற்படுவது வரலாறாக உள்ளது.
இந்நிலையில் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் ஈழத்தமிழர்களின் இருப்புக்கான அடையாளமாக முன்னிறுத்த செயற்பாடு மறுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழரின் இறைமையைப் பலப்படுத்தி ஈழமக்களை ஒன்றுபடுத்தி இலங்கையில் தாயக தேசிய தன்னாட்சி உள்ள உலகின் மக்கள் இனம் ஈழத்தமிழர்கள் எனச் சிவில் சமுகத்தினர் முயற்சிப்பது, சமகாலத்தில் உலக அரசியலில் சிவில் சமுகங்கள் ஒன்றுபட்டு, அரசியலில் உள்ள இறுக்க நிலைகளைக் கட்டுடைப்பு செய்யும் உலகப் பொதுமையின் வழியிலானதாக அமைகிறது என்பதே இலக்கின் எண்ணம்.

Tamil News