எதிா்காலத்திலும் இலங்கையின் நம்பிக்கையான நண்பனாக இந்தியா இருக்கும் – ஜெய்சங்கா்

இந்தியா எதிர்காலத்திலும் இலங்கையின் நம்பிக்கையான நண்பனாக செயற்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

இலங்கை விஜயத்தை நிறைவு செய்து இந்தியா திரும்பியதன் பின்னர் தனது உத்தியோகபூர்வ X பக்கத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

இலங்கைக்கு ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர்  கொழும்பிலிருந்து நேற்று மாலை புறப்பட்டுச் சென்றார். 

தனது பதவிக்காலத்தின் முதலாவது பயணமான இலங்கை விஜயம் மிகவும் சிறப்பானதாக அமைந்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார். 

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தனது ஒருநாள் விஜயத்தில், முதலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்ததுடன், அதன் பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடினார்.

அத்துடன், இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களை சந்தித்துக் கலந்துரையாடியதுடன், இதன்போது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அதன்  பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து கலந்துரையாடினார். 

இதனையடுத்து,  தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் இந்திய வௌிவிவகார அமைச்சர் சந்தித்து நேற்று மாலை கலந்துரையாடியிருந்ததுடன் வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் மலையக அரசியல் பிரதிநிதிகளும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.