தோ்தலை நடத்தாதிருக்க சட்டத்தின் ஓட்டைகளை ரணில் தேடுகிறாா் – ஜீ.எல்.பீரிஸ்

“ஜனாதிபதித் தேர்தலை நடத்தாது அதிகாரத்தில் தொடர்ந்தும் இருப்பதற்கான முயற்சிகளை ரணில் விக்கிரமசிங்க கைவிட்டுவிட்டார் என்று எவரும் நம்பக் கூடாது” என்றும், “அதற்காக பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு அரசியலமைப்பில் ஓட்டைகளை தேடும் நடவடிக்கையில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளாா்” என்றும் சுதந்திர மக்கள் சபை நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே  பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் கூறுகையில், “ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான  அதிகாரம் இன்னும் 23 நாட்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கவுள்ளது. இந்நிலையில் அரசாங்கம் சட்டத்திற்கு முரணான வகையில் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது” என்று தெரிவித்தாா்.

“அரசியலமைப்புக்கமைய பொறுப்பு உள்ள நிறுவனங்களில் நீதிமன்றம் பிரதானமானதாக இருக்கின்றது. இதனையும் மீறி நடவடிக்கைகளை முன்னெடுக்க  அரசாங்கம் திட்டமிடுகின்றது. இதற்கு சிறந்த வெளிப்படையான உதாரணமாக கடந்த வாரத்தில் ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்து கூறிய கருத்தை கூறலாம்” என்று சுட்டிக்காட்டிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், “இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தாது இருப்பதற்கு ஒவ்வொரு முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுக்கின்றது. அதில் ஒரு நடவடிக்கையாக எங்காவது அரசியலமைப்பில் ஓட்டை உள்ளதா என்று தேடுகின்றது” என்றும் தெரிவித்தாா்.

“நீதியான ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும். இன்னும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை நடத்தாது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிகளை கைவிட்டு விட்டார் என்று நான்

நினைக்கவில்லை. அவர் எல்லா வழிகளிலும் முயற்சிக்கின்றார்” என்றும், “மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியுமென்றால் சர்வஜன வாக்கெடுப்பின்றி அதிகாரத்தை தக்க வைக்க முயற்சிக்கலாம். ஆனால் தேர்தலை நடத்தாது இருப்பதற்கு நாங்கள் இடமளிக்கப் போவதில்லை” என்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதன் போது தெரிவித்தாா்.