கட்சித் தாவலைத் தடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீவிர முயற்சி

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று முக்கிய தலைவர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர்களுடன் இணைந்து வேறு நாடாளுமன்ற உறுப்பினா்களும் செல்வதைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, அரசாங்கத்தில் இணைவதாக சந்தேகிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது மனைவிமாருக்கு தொலைபேசி அழைப்புகள் எடுப்பதன் மூலம் அவர்கள் இணையவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா, சம்பிக்க ரணவக்க ஆகியோர் அரசாங்கத்துடன் இணைவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் ஏனையோர் இணைவார்கள் என்ற சந்தேகத்தில் இவ்வாறான சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்து இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கத்தின் அதிகபட்ச ஆயுட்காலம் மூன்று மாதங்கள் எனவும், அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தால் அரசாங்கத்தில் இணைந்து கொள்பவர்கள் தமது அரசியல் வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமெனவும் சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் மீண்டும் நாடாளுமன்றத்துக்குச் சென்று ஐக்கிய மக்கள் சக்தியால் அமைக்கப்படும் அரசாங்கத்தில் பதவியைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக இருப்பதாகவும் அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.