காணாமல் போனோருக்கான அலுவலகத்தில் பதிவு செய்யாவிடின் உதவி கிடைக்காது – உறவுகளை மிரட்டும் கிராம சேவையாளர்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனோருக்கான (ஓ.எம்.பி)அலுவலகத்தின் நஷ்ட ஈட்டினையும் மரண சான்றிதழினையும் பெற்றுக்கொள்வதற்காக கிராம சேவகர்கள் கிராம அமைப்புக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மிரட்டுகின்ற சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் ஒன்று நேற்று புதன்கிழமை முல்லைத்தீவு நகரப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போது கருத்து தெரிவிக்கையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாக நீதி கோரி போராட்டம் மேற்கொண்டுவரும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்று முல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தில் நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதில் கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி ம.ஈஸ்வரி, சர்வதேசத்திடம் நீதி கோரி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். ஐ.நா சபையில் எங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது இந்த நிலையில் நீதி கோரி போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம். தேடிக்கொண்டிருக்கும் பெற்றோர் இறந்து கொண்டிருக்கின்றார்கள். இலங்கையில் ஓ.எம்.பி அலுவலகத்தினால் நஷ்டஈடும் கொடுத்து மரண சான்றிதழும் கொடுக்கும் ஏற்பாடுகள் மக்களை விரட்டிவிரட்டி செய்கின்றார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை தொடர்ச்சியாக கிராம உத்தியோகத்தர் ஊடாகவும் கிராம அமைப்புக்கள் ஊடாகவும் அழுத்தங்கள் கொடுத்து மிரட்டுகின்றார்கள் இந்த பதிவுகள் செய்யாவிடின் எந்த ஒரு அரச உதவிகளும் தரமுடியாது என்று முல்லைத்தீவு மாவட்டத்தில் மிரட்டல் விடுக்கப்படுகின்றது.

இந்த மிரட்டல்களை தாண்டி எமக்கான நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்டுத்தான் தான் நாம் போராடி வருகின்றோம் எமக்கான நீதியினை சர்வதேசம் தான் தரவேண்டும் என்றார்.