ரணிலின் அறிவிப்பு தாமதமாவது ஏன்? 30 ஆம் திகதி அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்ப்பு

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வழங்குவதற்கு இன்னும் மூன்று வாரங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கவுள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரத்தை ஆரம்பிக்க பல கட்சிகள் தயாராகியிருக்கின்றன.

எனினும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் தேர்தலில் போட்டியிடுவாரா என்பதை அறிந்து கொள்வதில் பல கட்சிகள் ஆர்வமாகவுள்ளன. அத்துடன் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் போட்டியிட வைப்பதற்கு பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பாரிய திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவாரென ஐக்கிய தேசியக் கட்சியினர் பிரசாரங்களை முன்னெடுத்த போதும், கடன் மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களை மாத்திரம் அவர் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16ஆம் திகதி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மாத்தறையில் ராஜபக்ச இல்லாத மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்து ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக போட்டியிடுவதை உத்தியோகபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டிருந்தார்.

அதற்கு தயாராகும் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்தறை தொகுதி அமைப்பாளர்களுக்கு, அதில் கலந்து கொள்ள வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் பல்வேறு காரணங்களால் கடந்த 16ஆம் திகதி கூட்டத்தை நடத்த முடியாத நிலையில், அது காணி உறுதி வழங்கும் நிகழ்வாக மாற்றப்பட்டது. பின்னர் அந்த நிகழ்வும் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது எதிர்வரும் 30ஆம் திகதி ஜனாதிபதி பங்கேற்கும் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி மாத்தறையில் நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை உத்தியோகபூர்வமாக அறிவிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.