சண்டையின்றி அதிகாரத்தை பகிர்வதற்காக சம்பந்தன் நீண்ட தூரம் பயணித்தார் – ஜனாதிபதி

சண்டையின்றி அதிகாரத்தை பகிர்வதற்காக இரா.சம்பந்தன் நீண்ட தூரம் பயணித்தார். அதனை அடைய இன்னும் குறுகியதூரமே இருந்தது. அந்த குறுகிய தூரத்தை நாம் அடைவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கை தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் மறைவு தொடர்பில் அனுதாபம் தெரிவித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி மேலும் பேசுகையில்,

“நாடாளுமன்றத்தில் எங்களோடு பணியாற்றிய சக நண்பர், இரா. சம்பந்தன் காலமாகிவிட்டார். இக்கட்டான நிலையில் நாங்கள் ஒன்றாக பணியாற்றியுள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முக்கிய உறுப்பினராக இருந்தவர் என்பதுடன், இந்த நாட்டின் இறையாண்மைக்காக பாடுபட்டவர். இந்த நாட்டை நான் பிரிப்பேன் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? என்று அவர் என்னிடம் கேட்டார். சம்பந்தன் அரசியலுக்கு வந்த போது நான் சிறிய பையனாக இருந்தேன். இங்குள்ளவர்கள் பலர் பிறந்துகூட இருக்க மாட்டீர்கள்.

அதிகாரம் எவ்வாறு பகிரப்பட வேண்டும். நாம் அதற்காக சண்டையிடக் கூடாது என்ற கருத்தை அவர் கொண்டிருந்தார். அதற்காக அதிகளவில் பாடுபட்டார். குறுக்கியத் தூரமே இருந்தது. தற்போது அவர் இல்லாவிட்டாலும் அந்தத் தூரத்தை நாம் அடைவோம்” என்றார்.