பிரித்தானியாவில் தொழிற்கட்சியின் வெற்றியும் சவால்களும்

WhatsApp Image 2024 07 05 at 8.00.00 PM பிரித்தானியாவில் தொழிற்கட்சியின் வெற்றியும் சவால்களும்நேற்று வியாழக்கிழமை (4) பிரித்தானியாவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி 412 ஆசனங்களைப் பெற்று மிகப்பெரும் வெற்றியீட்டியுள்ளது. கடந்த 14 வருடங்களாக ஆட்சியில் இருந்த பழமைவாதக் கட்சி 121 ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், லிபரல் டெமோகிறட்டிக் கட்சி 71 ஆசனைங்களையும், நைஜல் பெராஜ் தலைமையிலான றிபோம் என்ற கட்சி 4 ஆசனங்களையும், வடஅயர்லாந்தின் விடுதலைப் போராட்ட அமைப்பின் அரசியல் பரிவான சின்பெயின் கட்சி 7 ஆசனங்களையும் பெற்றுள்ளன. ஸ்கொட்லாந்தில் தனிநாடு கோரிவந்த ஸ்கொட்லாந்து தேசிய கட்சி முன்னைய நிலையில் இருந்து 38 ஆசனங்களை இழந்து 9 ஆசனங்களை மட்டும் கைப்பற்றியுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (5) பக்கிங்கம் மாளிகையில் அரசர் சார்ஸ்யை சந்தித்து உத்தியோகபூர்வமாக தனது பதவியை அறிவித்த கியர் ஸ்ராமர் பின்னர் தனது பிரதமர் இல்லத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார்.

இது மாற்றத்துக்கான ஆரம்பம் எனவும், அரசாங்கம் மீண்டும் பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கான ஆணையை பெற்றுள்ளது எனவும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், நடந்து முடிந்த தேர்தல் ஆட்சியில் இருந்த கட்சிக்கு மக்கள் வழங்கிய தண்டனையாக அமைந்துள்ளது என பிரித்தானியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் பிரதமர் லிஸ் ரஸ், பெனி மோடன்ற் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உட்பட பல அமைச்சர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.

WhatsApp Image 2024 07 05 at 8.03.24 PM பிரித்தானியாவில் தொழிற்கட்சியின் வெற்றியும் சவால்களும்அதேசமயம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்து செல்வதற்கான உந்துசக்தியாக இருந்த நைஜல் பெராஜ் கடந்த ஏழு தடவைகள் தேர்தலில் தோல்வியடைந்தபோதும் தற்போது எட்டாவது தடவையாக வெற்றிபெற்றுள்ளார்.

அவர் உருவாக்கிய கட்சியே பழமைவாதக் கட்சியின் தோல்விக்கு பிரதான காரணம் என கருதப்படுகின்றது. தொழிற்கட்சி 9.7 மில்லியன் வாக்குகளையும், பழமைவாதக் கட்சி 6.8 மில்லியன் வாக்குகளையும், நைஜல் பெராஜின் கட்சி 4.1 மில்லியன் வாக்குகளையும் பெற்றுள்ளன.

இந்த வாக்கு விகிதத்தை பழமைவாதக் கட்சியின் வாக்குகளுடன் சேர்த்தால் அதன் விகிதம் ஏறத்தாள 11 விகிதமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே தொழிற்கட்சியின் தலைவராக இருந்து 2017 ஆம் ஆண்டு 40 விகித வாக்குகளை பொதுத்தேர்தலில் பெற்ற ஜெரமி கோர்பைன் தனது தொகுதியில் சுயேட்சையாக நின்று அவரை கட்சியில் இருந்து வெளியேற்றிய தொழிற்கட்சியை தோற்கடித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிரான கருத்தை கூறியதாக தெரிவித்து அவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன், இந்த பொதுத்தேர்தலில் போட்டியிடாது அவரை கட்சியில் இருந்தும் வெளியேற்றியிருந்தனர். ஆனால் அந்த தொகுதி மக்கள் அவரை 11ஆவது தடவையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்துள்ளனர்.

மேலும் பல தொகுதிகளில் இஸ்ரேல் பாலஸ்தீனப் போர் முஸ்லீம் மக்களின் வாக்குகளில் எதிரொலித்துள்ளது. பல முஸ்லீம் பிரதிநிதிகள் சுயேயட்சையாக வெற்றிபெற்றுள்ளனர். 3 தொகுதிகளில் தொழிற்கட்சி கடும் சவால்களையும் முஸ்லீம் வேட்பாளர்களுக்கு எதிராக சந்தித்திருந்தது. சில தொகுதிகளில் சில நூறு வாக்கு வித்தியாசத்தில் பிரித்தானியாவின் பிரதான கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருந்தனர்.

இந்த தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத்தமிழரான உமா குமரன் முதல் முறையாக ஈழத்தமிழர் பிரதிநிதியாக வெற்றிபெற்றுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் கடன் தொலை ஏறத்தாள 2.6 றில்லியன் பவுண்ஸ்களை எட்டியுள்ளது. அது மொத்த உற்பத்தியின் 100 விகிதமாகும். கடந்த ஆண்டு 116 பில்லியன் பவுண்ஸ்களை பிரித்தானியா வட்டியாக கட்டியுள்ளது. 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது இரு மடங்காகும். எனவே எதிர்வரும் அரசுக்கு மிகுந்த சவால்கள் நிறைந்த காலமாகவே ஆட்சிக்காலம் இருக்கப்போகின்றது. உக்ரைன் போர் மற்றும் கோவிட் பெரும்தொற்று ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை மக்கள் தேடுவதே இந்த தேர்தலில் எதிரொலித்துள்ளது. அதனை தொழிற்கட்சி நிறைவேற்றவதில் தான் அதன் எதிர்காலம் தங்கியுள்ளது.