ஜனாதிபதித் தோ்தல் தினம் தொடா்பான குழப்பம் – இடையீட்டு மனுக்கள் பல தாக்கல்

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டிய தினம் தொடர்பில் அரசியலமைப்புக்கமைய உயர் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்காமல் தள்ளுபடி செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் பல இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், கலாநிதி ஹரிணி அமரசூரிய, சோசலிச இளைஞர் சங்கத்தின் எரங்க குணசேகர ஆகியோர் மனுக்களை முன்வைத்திருந்தனர்.

இதற்கு மேலதிகமாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட குழுவினரும் இந்த இடைக்கால மனுவை சமர்ப்பித்துள்ளனர். இடையீட்டு மனுதாரர்கள், அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் 03வது அத்தியாயத்தின் ஊடாக அரசியலமைப்பின் 30(2)வது சரத்து திருத்தப்பட்டுள்ளதாகவும் அதன் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 06 வருடங்களில் இருந்து 05 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

இதன்படி, அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் இந்த வருடத்துடன் முடிவடைவதால், இந்த வருடத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அவசியமாகும். ஜனாதிபதி தேர்தலை
ஒத்திவைக்குமாறு கோரி உரிய மனுவை சமர்ப்பிக்கும் போது தவறான உண்மைகளை நீதிமன்றத்தில் முன்வைத்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த மனுதாரர் முயற்சித்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மனுதாரர் தனது கோரிக்கையை நியாயப்படுத்த உதவும் எந்த உண்மைகளையும் முன்வைக்கத் தவறிவிட்டார் என்றும் மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன்படி, இந்த மனு தொடர்பாக தலையிட்டு உண்மைகளை முன்வைக்க அனுமதிக்குமாறும், தாங்கள் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்து உரிய மனுவை தள்ளுபடி செய்யுமாறும் இடைக்கால மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் திகதி குறித்து உயர் நீதிமன்றம் விளக்கம் அளிக்கும் வரை தற்போது திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு தொழிலதிபர் சி.டி.லெனாவ இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.