ஈழக்கனவை நனவாக்கவுள்ள பிரித்தானியாவின் புதிய பிரதமர்: சிங்கள வார ஏடு அச்சம்

99 ஈழக்கனவை நனவாக்கவுள்ள பிரித்தானியாவின் புதிய பிரதமர்: சிங்கள வார ஏடு அச்சம்பிரித்தானியாவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் தொழில் கட்சியின் புதிய பிரதமரான கியர் ஸ்ராமர் அவர்கள் இலங்கையை பிளவுபடுத்தி ஈழக்கனவை நனவாக்கி விடுவார் என்று சிங்கள வார ஏடு ஒன்று அச்சம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று சனிக்கிழமை வெளியான அந்த வார ஏட்டின் கட்டுரை ஒன்றில் வெளியானவற்றின் முக்கிய பகுதிகள்:

பிரித்தானியாவில் புதிதாக பதவியேற்றுள்ள தொழில் கட்சி அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை இலங்கைக்கு மிகவும் மோசமானதாக அமையும் என்ற பெரும் அச்சம் இங்குள்ள இலங்கையர்கள் இடையே உள்ளது. புலம்பெயர் புலிகளின் அப்பட்டமான பொய்களுக்கு ஏமாந்து இலங்கைக்கு எதிரான அரசியல்வாதியாக தொழில் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரமி கோர்பினும் புதிய பிரதமரும் மாறியதே இதற்குக் காரணம்.

இலங்கையின் வடக்கில் ஈழ அரசை அமைப்பதற்கான போராட்டத்துக்கு புலம்பெயர் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கடந்த காலங்களில் பல அறிக்கைகளை வெளியிட்டார்.

புலம்பெயர் தமிழர்களின் அழைப்பின் பேரில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொழிலாளர் தலைவர் வெளியிட்ட காணொளி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று, இலங்கைப் போரின் இறுதிப் பகுதியில் கொடூரமாகக் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நாங்கள் மரியாதையுடன் நினைவு கூருகிறோம். தொழிலாளர் கட்சி எப்போதும் தமிழ் மக்களுடன் உள்ளது. இன்று, இந்த முக்கியமான நாளில், எங்கள் எண்ணங்கள் அனைத்தும் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்கள் மீது செல்கின்றன.

இந்த நேரத்தில் நாம் அவர்களை மரியாதையுடன் நினைவு கூர்வதுடன் உண்மையை அறிந்து பொறுப்புக்கூறலை நாட வேண்டும். இந்தக் குற்றச் செயல்கள் நடந்து பதின்மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இந்தக் கொலையாளிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.

எனவே, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த மனித உரிமைகளை மீறிய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று தொழிலாளர் கட்சியாக மீண்டும் உறுதியளிக்கிறோம். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரையை பின்பற்றி, தமிழ் சமூகத்துடன் ஒன்றிணைந்து இந்த கொலையாளிகளை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு பிரித்தானிய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், விடுதலைப் புலி ஆதரவாளர்களின் அழைப்பின் பேரில் கடந்த ஜனவரி மாதம் தைப்பொங்கல் பண்டிகையையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் கியர் ஸ்ராமர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“இலங்கையில் சுயநிர்ணயம், சமாதானம் மற்றும் நீதிக்காக தமிழ் மக்கள் செய்த தியாகங்களை நாம் நினைவுகூர வேண்டிய தருணம் இதுவாகும். இலங்கை அரசாங்கம் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான தனது ஆதரவை மேலும் தாமதப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு, ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் தெளிவான பொறுப்பில் செயற்படுமாறு தொழிற்கட்சி தொடர்ந்து வலியுறுத்துகிறது. எதிர்கால தொழிற்கட்சி அரசாங்கம் தமிழ் சமூகங்களுடன் தோளோடு தோள் நின்று இலங்கையில் அமைதி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்ப உதவுவதற்காக எமது சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயற்படும்.

கடந்த ஆறு வாரங்களாக புலம்பெயர் தமிழர்கள் இரவு-பகலாக வீடு வீடாகச் சென்று தொழிலாளர் கட்சிக்கு ஆதரவாக வாக்கு கேட்டு வந்திருக்கின்றனர். கடந்த வாரம் லண்டன் நீதிமன்றம், விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தற்போதைய தடையை நீக்குவதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் அவநம்பிக்கையான முயற்சியை, முன்னைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் வழக்கறிஞர்கள் வெற்றிகரமாக வாதிட்டதையடுத்து, கடந்த வாரம் தூக்கி எறிந்தனர். ஆனால், இன்று ஆட்சிக்கு வந்துள்ள தொழில் கட்சி சில மாதங்களிலேயே இந்த தடையை மனமுவந்து நீக்கி ஈழத்துக்கான பாதையை திறந்து விடும் என்று இங்குள்ள பல இலங்கையர்கள் கூறுகின்றனர்.

தொழில் கட்சி அரசின் உதவியால் ஈழக் கனவை 10 ஆண்டுகளில் நிறைவேற்றி விடலாம் என விடுதலைப் புலி ஆதரவாளர்கள் நினைக்கின்றனர். எனவே, தொழில் கட்சி அரசாங்கத்தின் கீழ் லண்டனில் என்ன நடக்கிறது என்பது குறித்து இலங்கை அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இலங்கையை பிளவுபடுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்வைக்கப்பட்ட எந்தவொரு திட்டத்திற்கும் தொழில் கட்சி பிரதமர் கியர் ஸ்ராமர் இரு கரங்களையும் உயர்த்துவார் என இங்குள்ள இலங்கையர்கள் உறுதியாக நம்புகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.