தேர்தல் பணிகளை ஆணைக்குழு தீவிரப்படுத்தும் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க கூறுகிறார்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் அதற்கான பணிகளை ஆணைக்குழு தீவிரப்படுத்தும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர். ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார்.

வெலிக்கடை சரண மாவத்தையில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் வைத்து ஆணைக்குழுவின் வகிபாகம் குறித்து அவா் விரிவான விளக்கம் ஒன்றைக் கொடுத்தாா்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க இங்கு மேலும் தெரிவிக்கையில், “ஜூலை 17 க்கு பிறகு ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க அரசியலமைப்பு ரீதியாக எங்களுக்கு அதிகாரம் உள்ளது. தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 க்குள் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பை வெளியிடும் நாளில் இருந்து 16 முதல் 21 நாட்களுக்குள் வேட்புமனுக்கள் ஏற்கப்பட வேண்டும். ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் அத்தகைய அறிவிப்பை வெளியிட நாங்கள் தயாராகிறோம்” என்று தெரிவித்தாா்.

தொடா்ந்தும் கருத்துத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க, “தேர்தல் திகதி அக்டோபர் 16 காலக்கெடுவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இருக்கும். திறைசேரி ஏற்கனவே 1000 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. தொகை அதிகமாக இருந்தால், கூடுதல் நிதியை நாடுவோம். இருப்பினும், சம்பந்தப்பட்ட வேலை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால் இது போதுமானது என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தாா்.

“ஜனாதிபதித் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடி 70 இலட்சமாக இருக்கும். தற்போது வாக்காளர் பதிவு பணியை துரிதப்படுத்தி வருகிறோம். தகுதியானவர்கள் தங்களது பெயர்களை இணையவழியில் வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யலாம். அவற்றைச் சரிபார்த்து உறுதிப்படுத்துவோம். இந்த ஆண்டின் முதல் காலாண்டில், 2024 பதிவேட்டில் சுமார் 74,000 புதிய வாக்காளர்களை சேர்த்துள்ளோம்” என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்தாா்.

“2019 ஜனாதிபதி தேர்தலின் போது செய்தது போல் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை வரவழைக்க திட்டமிட்டிருக்கிறோம். ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் எங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர். பொதுநலவாய செயலகமும் தேர்தல் கண்காணிப்பாளர்களாக பங்கேற்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது” என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க மேலும் தெரிவித்தாா்.