பொது ஜன பெரமுனவின் முடிவு இம்மாத இறுதியில் வெளிப்படுத்தப்படும்

உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான வேலைத்திட்டங்களை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் இறுதித் தீர்மானம் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிறீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பதா அல்லது ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது குறித்த தீர்மானம் அன்றைய தினம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம், இனியும் தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படாது என்ற நிலைமை உருவாகியுள்ளதால், அனைத்து கட்சிகளும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தனது கவனத்தை செலுத்தியுள்ளன.

இதன் அடிப்படையில் எதிர்வரும் 25 ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் அன்றைய தினம் கட்சியின் சார்பில் வேட்பாளரை நியமிப்பதா அல்லது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தலுக்கு முகங்கொடுப்பதா என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், கட்சி சார்பாக தனி வேட்பாளரை நியமித்தால் வெற்றி
பெறுவதற்கான சாத்தியங்கள் குறைவு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்காவிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதால் ரணில் விக்ரமசிங்கவுக்கே ஆதரவு வழங்கப்பட வேண்டுமென பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக ரணில் விக்ரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் வாராந்தம் மூன்று சந்திப்புகள் இடம்பெறுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு தயாராக இருப்பதால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் பரிசீலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்காவிட்டால் கட்சியின் சார்பில் வேட்பாளராக களமிறங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றார்.