பிரதமா் தினேஷ் குணவா்தன யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு இன்று விஜயம்

பிரதமர் தினேஷ் குணவர்தன, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இன்று விஜயம் செய்யவுள்ளார். இதன்போது இரண்டு மாவட்டங்களிலும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

இன்று காலையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் பிரதமர், யாழ். மாவட்ட செயலகத்தில் காலை 9 மணிக்கு நடைபெறும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்தக் கூட்டத்தின் நிறைவில் சீன அரசால் அன்பளிப்புச் செய்யப்பட்ட அரிசி, யாழ். மாவட்ட மீனவர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமருடன் இலங்கைக்கான சீனத் தூதுவரும் கலந்துகொள்ளவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து முற்பகல் 11 மணியளவில் சுன்னாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலையக் கட்டடத்தைப் பிரதமர் திறந்து வைக்கவுள்ளார்.

முற்பகல் 11. 45 மணியளவில் குருநகர் மீனவர் துறைமுகம் அருகே உள்ள மீனவர் ஓய்வு மண்டபத்தில் மீனவர் குடும்பங்களுக்கு மீன்பிடிச் சாதனங்கள் மற்றும் உலர் உணவுகளை அவர் வழங்கிவைக்கவுள்ளார்.

நண்பகல் 12 மணியளவில் யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அரச ஊழியர் குழுவுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள புதிய வர்த்தக சேவை நிலையத்தைப் பிற்பகல் 14. 30 மணிக்குத் திறந்து வைக்கவுள்ளார்.

மாலை 3 மணிக்குக் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெறும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளகிறாா்.