பொதுஜன பெரமுனவின் வேட்பாளா் யாா்? எதிா்வரும் 25 ஆம் திகதி மஹிந்த அறிவிப்பாா்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் 25 ஆம் திகதி அறிவிக்கவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்ஷவால் அன்றைய தினம் விசேட உரை நிகழ்த்தப்படவுள்ளது எனவும், இதற்காக பிரமாண்ட நிகழ்வொன்று நடத்தப்படலாம் எனவும் தெரியவருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நியமிப்பதா அல்லது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா என்பது தொடர்பில் மொட்டுக் கட்சி ஆராய்ந்து வருகின்றது.

தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே அந்தக் கட்சி நகர்கின்றது எனத் தெரியவருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து குறைந்தபட்சம் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது வளைத்துப் போடுமாறு ரணிலிடம் மொட்டுக் கட்சி இடித்துரைத்துள்ளது. அதனால்தான் வேட்பாளரை அறிவிப்பதற்கு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மொட்டுக் கட்சி கால அவகாசம் எடுத்துள்ளது.