சாத்தியமான முதலாவது நாளிலேயே ஜனாதிபதித் தோ்தலை நடத்துங்கள் – எதிரணி உறுப்பினா்கள் கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைக்க இடமளிக்காது தேர்தலை நடத்துவதற்கு சாத்தியமான முதலாவது நாளிலேயே அதனை நடத்த ஏற்பாடுகளை செய்யுமாறு கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

“அரசியலமைப்பு சதிகளின் மூலம் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஏற்படுத்தப்படுகின்ற அழுத்தங்களை தடுத்தல் மற்றும் தேர்தலை உரிய காலத்தில் நடாத்துதல்” என்ற தலைப்பில் இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில் ஐக்கிய மக்கள் சக்தியினர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்ற ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் இந்தத் கடிதத்தை கையளித்துள்ளனர்.

இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக தோல்வியேற்படும் என்ற அச்சத்தில் உள்ள தற்போதைய அரசாங்கம் 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை பல்வேறு உத்திகளை கையாண்டு ஒத்தி வைக்க முயற்சிக்கின்றமை இரகசிமானது அல்ல. இந்த செயற்பாட்டின் இன்னுமொரு நடவடிக்கை கடந்த வாரத்தில் தெரியவந்தது.

எவ்வாறாயினும் அரசியலமைப்பின் 30 (2) வது உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் உயர் நீதிமன்றத்தினால் 3 தடவைகள் பல்வேறு தீர்ப்புகள் மூலம் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் மக்களின் பறிக்க முடியாத இறையாண்மை மற்றும் வாக்குரிமையை நடைமுறையில் மக்களால் பரிசோதிக்கப்படும் பிரதான தேர்தலான ஜனாதிபதித் தேர்தல் எக்காரணம் கொண்டும் ஒத்தி வைக்கப்படக்கூடாது. மக்கள் போராட்டத்தின் மூலம் நீக்கப்பட்ட ஜனாதிபதியயின் எஞ்சிய பதவிக்காலத்திற்காக தற்காலிக அடிப்படையில் தற்போதைய ஜனாதிபதி நியமிக்கப்பட்டார்.

அவர் நேரடியாக மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. இதனால் முடியுமான முதலாவது சந்தர்ப்பத்திலேயே தமக்காக நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்துவதற்கு மக்கள் விருப்பத்துடன் புதிய
ஜனாதிபதியை நியமிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

இதன்படி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு சாத்தியமான முதல் நாளிலேயே அதனை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறும், தேர்தலை சுதந்திரமான, நியாயமான சூழ்நிலையில் நடத்துவதற்கு தங்களின் அதிகபட்ச அதிகாரத்தை பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.