கறுப்பு யூலை ஈழத்தமிழின அழிப்பின் 41வது ஆண்டில் ஈழத்தமிழர் பொருளாதாரப் பலமே இறைமையை மீட்குமென உணர்வோம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 295

காலனித்துவ பிரித்தானியா கைப்பற்றிய தங்கள் இறைமையின் அடிப்படையில் தங்களுக்கான தன்னாட்சியை ஏற்படுத்தி பாதுகாப்பான அமைதியான வாழ்வையும் வளர்ச்சிகளையும் ஈழத்தமிழர்கள் மீளப் பெறுதல் என்கின்ற ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இன்று அனைத்துலக வல்லாண்மைகள் பிராந்திய மேலாண்மைகளால் சிங்களவர்களுக்குச் சார்பான முறையில் சிங்கள பௌத்த நாட்டில் வாழும் சமுகமொன்றின் பிரச்சினையென திரிபுபடுத்தப்பட்டுள்ள நிலையில் சிறிலங்காவால் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈழத்தமிழரின் பொருளாதாரத்தைச் சிதைக்கவும் மனித வலுவை அழிக்கவும் வாழ்வாதாரமான நிலத்தைக் கடலை வானை ஆக்கிரமிக்கவும் சிறிலங்கா நடாத்திய   1983ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தின் ஈழத்தமிழின அழிப்பான “கறுப்பு யூலை”யின் 41வது ஆண்டு நினைவேந்தலில் தாயகத்திலும் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் ஆர்வமுடன் பங்கேற்கத் தொடங்கியுள்ளனர். 41 ஆண்டுகளாக தண்டனை நீதியைச் சிறிலங்காவோ பரிகார நீதியை ஈழத்தமிழர்களோ அடைய முடியாத வகையில் ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் தாயகத்தில் அவர்கள் தங்கள் தன்னாட்சியுடன் வாழ்வதற்கான வாழ்வை மீளுற்பத்தி செய்வதைப் பிரிவினை என்றும் தங்களின் உயிர் உடைமைகள் நாளாந்த வாழ்வு அழிப்பில் இருந்து தங்களைப் பாதுகாக்க எடுக்கும் முயற்சிகளைப் பயங்கரவாதம் எனவும் சிறிலங்காவும் அதன் ஆதரவு நாடுகளும்  41 ஆண்டுகளாகத் திரிபுவாதம் செய்து ஈழத்தமிழர்களுக்கு  அனைத்துலகச் சட்டங்களின் கீழ் நீதி கிடைப்பதையோ, வெளியக தன்னாட்சி அடிப்படையில் தீர்வு கிடைப்பதையோ தடுத்து வருகின்றன. பொருளாதாரத் தேவைக்கு மட்டுமல்ல இந்தத் தேவைக்கும் சிறிலங்காவுக்கு கூட்டாண்மைகளும் பங்காண்மைகளும் தேவையாக உள்ளது.
கடந்த வாரத்தில் சிறிலங்காவில் பாரத் சிறிலங்கா கூட்டாண்மையும், அமெரிக்க சிறிலங்காப் பங்காண்மையும் சிறிலங்கா அரசாங்கத்தின் இறைமையின் மேல் மேலாண்மை செய்யும் நடைமுறை நிகழ்வுகளைக் காணக் கூடியதாக உள்ளது. பாரத் சிறிலங்கா கூட்டாண்மையின் கீழ் கடந்தவார நிகழ்வாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் ஆலோசகர் அனிஷ்குமார் தலைமையிலான இந்திய உயர் மட்டக்குழுவொன்று கொழும்புக்கு வருகைதந்து பிரதமர் மோடியின் ‘கதி சக்தித் திட்டம்’ எனப்படும் ஒருங்கிணைந்த திட்டமிடல், ஒத்திசைவான நடைமுறைப்படுத்தல்கள், திட்டக் கண்காணிப்பு குறித்து தரவுகள் அடிப்படையிலான முடிவுகளை எடுப்பது குறித்து கலந்துரையாடி உள்ளது. சிறிலங்காவின் துறைமுகங்கள் கப்பல் துறை மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சிறிலங்காப் பிரதமரின் செயலாளர், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி செயலகத்தில் உட்கட்டமைப்புத் திட்டங்களைக் நெறிப்படுத்தும் உயர் அதிகாரிகள், நிதி அமைச்சின் திணைக்களங்கள் பலவற்றினதும் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றமை பாரத் சிறிலங்கா கூட்டாண்மையின் செயல்படுத்தலை பரிசோதித்து  விரைவுபடுத்தும் இந்திய செயற்பாடாக காணப்பட்டது.
இந்து மாக்கடலில் உள்ள ‘அபானாசி நிக்கிட்டின்’ கடல்மலைப் பகுதியில் உள்ள கோபல்ட் கனிமம் குறித்த ஆய்வில் ஈடுபடுவதற்கு இந்தியா ஜமேக்காவில் உள்ள அனைத்துலக கடற்படுக்கை அதிகாரசபையிடம் அனுமதி கோரியதைச் சிறிலங்கா எதிர்த்து இப்பகுதி தனது விரிவாக்கப்பட்ட கண்ட அடுக்குக்குள் அமைவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் கண்ட அடுக்குகளின் வரம்புகள் குறித்த ஆணைக்குழுவின் முடிவு அறிவிக்கப்படும்வரை இந்தியாவுக்கு அனுமதி அளிக்கக் கூடாதென அறிவித்துள்ள சூழலிலும், எந்த நாட்டு ஆய்வுக்கப்பலும் சிறிலங்காவின் துறைமுகங்களுக்கு சனவரி மாதம் முதல் வரலாம் என இந்திய நலனுக்கு எதிரான முடிவை அறிவித்துள்ள நிலையிலும் பாரத் சிறிலங்கா கூட்டாண்மையைப் பயன்படுத்தி சிறிலங்காவின் கடல்-நில-வான் இணைப்பு உடன்படிக்கைகளை வேகப்படுத்த முயல்வதன் பின்னணியிலேயே இந்தியாவின் சிறிலங்கா மீதான மேலாண்மை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த வாரம் ரஷ்யாவுக்குச் சென்ற மோடி சென்னையிலிருந்து ரஷ்யாவின் விளாடிவொஸ்ரொக் (Vladivostok) 5647 கடல்மைல் நீளக் கடற்பாதை அமைப்பின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.  இந்நிலையில் தலை மன்னார் காங்கேசன்துறை கடலிணைப்பு இராமேஸ்வரம் பாம்பன் பாலம் தரையிணைப்பு திருகோணமலைத்துறைமுக கொழும்புத்துறைமுக இணைப்புக்கள் பலாலி திருச்சி  விமான இணைப்புக்கள் இந்தியாவின் சமகாலத்தேவையாகின்றது. காங்கேசன்துறை கொழும்பு துறைமுக இணைப்புக்கள் வழி சீனாவுடன் வரலாற்றுத் தொடர்புடைய மலேசிய சிங்கப்பூர் உட்பட்ட தென்கிழக்காசிய நாடுகளின் கடற்பாதை ஊடாக இந்தியா தனக்கான கடற்பலத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவையும் பலமாக உள்ளது. அதே வேளை சீனாவுக்கு இந்தியாவின் தென்னிந்திய படைபல இருப்புக்களை ஆயுதக் குதங்களை வேவு பார்ப்பதற்கு ஈழத்தமிழர் தாயகக் கடற்பரப்புள் தன்னை நிலைநிறுத்துவது முக்கிய தேவையாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே சீனாவின் ஆய்வுக்கப்பலுக்கு விதிக்கப்பட்டிருந்த ஒருவருடத் தடையை சனவரியில் அது முடிவடைவதுடன் நீக்கச் சிறிலங்கா முடிவுசெய்துள்ளது. இந்நிலையில் சிறிலங்காவின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மீக தளங்கள் அனைத்திலும் இந்திய மேலாண்மை சமகாலத்தின் தவிர்க்க இயலாத இந்தியத் தேவையாகிறது. இந்தத்தேவைக்குள் ஈழத்தமிழர் வலுவான சிவில் சமுகப் பொருளாதாரக் கட்டமைப்பு மூலமே தங்களுடைய பொருளாதாரப் பலத்தை இந்நாடுகளுக்கு வெளிப்படுத்தி உரையாடல்கள் வழி ஈழத்தமிழர் இறைமையைப் பாதுகாக்க முடியும்.
இதற்கிடையே அமெரிக்க சிறிலங்காப் பங்காண்மையை வலுப்படுத்தி அமெரிக்கா  தனது இலங்கையின் இந்து மாக்கடல் இருப்பை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், காலநிலை மாற்றம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஓத்துழைப்பு, கல்வி மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையிலான தொடர்பு என்னும் பத்து தலைப்புக்களில் 5வது அமெரிக்க சிறிலங்காப் பங்காண்மைக் கூட்டம் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் அரசியல் விவகாரப் பதில் அமைச்சர் ஜோண்பஸ் மற்றும் சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜயவர்த்தனா இடையே சிறிலங்காவின் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் 12.07.24 இல்  இடம்பெற்றுள்ளது. இந்நேரத்தில் புலம்பெயர் தமிழர்களுக்கான பொருளாதாரக் கட்டமைவு ஒன்று பலமாக அமைந்தால்தான் ஈழத்தமிழர் இறைமையைப் பேச்சுக்கள் வழி பாதுகாக்கலாம். மேலும் பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்ராமர் அவர்கள் நேட்டோவின் 75வது ஆண்டு நிறைவு ஒன்று கூடலில் வாசிங்டனில் உக்ரேனுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில் “நேட்டோ பாசிசத்தை தோற்கடித்த தலைமுறையினால் தோற்றுவிக்கப்பட்டது. நேட்டோ எங்களின் பலம் மட்டுமல்ல எங்களின் விழுமியங்களின் பலம். நாம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் இந்தச் செய்தியை வெளிப்படுத்த வேண்டும்” என்று கூறியமை விழுமியங்களைப் பாதுகாப்பதை முன்வைத்துக்  கூட்டாண்மைகள் உருவாக்கப்பட வேண்டும்  என்பதைத் தெளிவாக்கியது. அவ்வாறே பிரித்தானியாவின் ஆயுதப்படைகளின் அமைச்சர் லூக் பொலாட் அவர்கள் “பாதுகாப்புக்கான பங்களிப்பு மிக முக்கியம். அதே வேளை அப்பங்களிப்புக்கான பொருளாதாரமும் முக்கியம். இரண்டும் ஒரே நேரத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டும்” என்று கூறியுள்ளமை பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியத்தைத் தெளிவுபடுத்தியது. ஈழத்தமிழர்களும் தங்களின் பொருளாதாரத்தைச் சிதைத்த கறுப்பு யூலை மாதத்தில் ஈழத்தமிழர்களின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் சிவில் சமுகத்தின் அமைப்புக்களின் ஒருங்கிணைப்பை உருவாக்க உறுதியெடுத்தாலே அந்தப் பொருளாதாரப் பலத்தால் ஈழத்தமிழரின் இறைமை மீட்கப்படும் என்பதை வலியுறுத்திக் கூற இலக்கு விரும்புகிறது.

Tamil News