தோ்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் நாளை நள்ளிரவு ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் – இரு தினங்களில் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரத்தை தேர்தல் ஆணைக்குழு பெற்றுக்கொள்ளும். நாளை 16 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் தேர்தல் திகதியை அறிவிப்பதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கவுள்ளது.

1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்திற்கிணங்க, அரசியலமைப்பில் தேர்தல் ஆணைக் குழுவிற்கு ஏற்புடைய சந்தர்ப்பமொன்றில் ஜனாதிபதித் தேர்தல்களை நடாத்துவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஆணைக்குழு கூடி தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானித்த பின்னர் ஜனாதிபதி தேர்தலை அறிவித்து வேட்புமனுக்களை கோருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும்.

இந்த வர்த்தமானியில், அறிவிக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குள் வேட்பு மனுக்கள் பெறுவது முடிவடையும். அத்துடன் வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நாளிலிருந்து நாற்பத்தி இரண்டு நாட்கள் காலாவதியாகும் முன் வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பின் படி, நாடாளுமன்றத் தேர்தலை ஜனாதிபதி தீர்மானிக்கும் நிலையில் ஏனைய அனைத்து தேர்தல்களையும் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்கும் ஏற்பாடு காணப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டிய தினம் தொடர்பில் அரசியலமைப்புக்கமைய உயர் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே நிராகரிக்கப்பட்டது.

அத்துடன் ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பில் அரசியலமைப்பில் காணப்படும் முரண்பாடுகளை நிவர்த்திப்பதற்கான முன்மொழிவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லையென்றும் அதனால் அந்த திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றாது இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் அது அரசியலமைப்பை மீறுவதாக அமையுமென தீர்ப்பளிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது.