நாமல் ராஜபக்ஷவை பிரதமராக்க இணங்க வேண்டும் – மொட்டு அணியின் புதிய நிபந்தனை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி சிறீலங்கா பொதுஜன பெரமுனவால் புதிய நிபந்தனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் வேட்புமனுவை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் எனவும் ராஜபக்ஷக்கள் வலியுறுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தீர்மானத்தை நிறைவேற்றவில்லையாயின் அடுத்து என்ன செய்வது என பொதுஜன பெரமுன ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் 25 ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் குழுவை அரசாங்கத்தில் இணைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை முன்மொழியத் தீர்மானம் நிறைவேற்றவும் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்க மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சிரேஷ்ட குழுவொன்றை நியமிக்கவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டப்படி, நாளை மறுதினம் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. இதன்படி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதி எதிர்வரும் 27 அல்லது 29 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. அதற்கு முன்னதாக கட்சியின் பொதுக் கூட்டத்தை கூட்டுவதற்கு பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது. எனினும் பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படுமா அல்லது மத்திய குழுவின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், இன்னும் 10 நாட்களுக்குப் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பொதுஜன பெரமுன அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ராஜபக்ஷக்கள் தெரிவித்துள்ளனர்.