அரசாங்கத்தின் மீதான மக்களின் அங்கீகாரம் மூன்று மடங்கு அதிகரிப்பு – வெரிட்டே ரிசர்ச்சின் ஆய்வில் தெரிவிப்பு

நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதோடு, பொருளாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரப் போக்கு பற்றி மக்கள் நம்பிக்கையாக உணர்வதாக வெரிட்டே ரிசர்ச்சின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெரிட்டே ரிசர்ச்சின் 2024 ஜூலைக்குரிய “தேசத்தின் மனநிலை” கருத்துக்கணிப்பின் முடிவுகள் மூலம் இத்தகவல் வெளியாகியுள்ளது. 2024 பெப்ரவரியில் 7 வீதமாக இருந்த அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரத்தின் மதிப்பீடு, ஜூலை மாதத்தில் 24 வீதமாக அதாவது மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து பதிலளித்தவர்களில், 28 வீதமான மக்கள் அது நல்லது அல்லது சிறந்தது என்று தெரிவித்துள்ளனர். இது 2024 பெப்ரவரியில் காணப்பட்ட 9 வீதத்தில் இருந்து மூன்று மடங்கு அதிகரிப்பைக் குறித்து நிற்கிறது.

நாட்டின் பொருளாதார நிலைமைகள் சிறப்பான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன என்று நம்பும் மக்களின் பங்கும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிலளித்தவர்களில் 30 வீதமானோர் இந்தக் கருத்தைக் கொண்டிருந்ததோடு, இது 2024 பெப்ரவரியில் 9 வீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.