கலைந்தது செல்வத்தின் கனவு – அகிலன்

Selvam Adaikkalanathan கலைந்தது செல்வத்தின் கனவு - அகிலன்ண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்ப காலியாகும்? என்ற வகையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. அதற்காக தவறான நேரத்தில் தவறான காய்களை, கள நிலைமைகளை மதிப்பிடாமல் அவா்கள் நகா்த்திக்கொண்டிருப்பதுதான் நகைச்சுவை.

கடந்த சுமாா் ஒன்றரைத் தசாப்த காலமாக தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற வகையில் செயற்பட்டுக்கொண்டிருந்த சம்பந்தனின் மறைவைத் தொடா்ந்து, அவரது பதவியைப் பெறுவதற்கான காய் நகா்த்தல்களை கடந்த வாரங்களில் காணமுடிந்தது.

சம்பந்தரிடம் இரண்டு பதவிகள் இருந்தது. ஒன்று திருமலை மாவட்ட எம்.பி. பதவி. மற்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவா் பதவி இந்த இரண்டு பதவிகளையும் அவா் வினைத் திறனுடன் செய்தாரா என்பததையிட்டு இந்தக் கட்டுரையில் நாம் ஆராயவில்லை.

நம்பந்தனின் நாடாளுமன்ற உறுப்பினா் பதவி தோ்தல் சட்டங்களின் படி அவருக்கு அடுத்ததாக அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்ற சண்முகம் குகதாசனுக்குக் கொடுக்கப்பட்டது. அதில் எந்த சா்ச்சையும் இல்லை.

திருமலையில் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய கனடா குடியுரிமையைத் துறந்துவிட்டு திருமலையில் கடந்த தோ்தலை சந்தித்து 16,000 க்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றவா் அவா். பதவி இல்லாத நிலையிலும், மக்களுடன் மக்களாக நின்று பணியாற்றியவா்.

சென்னையிலிருந்து தமிழ் அகதிகள் புனா்வாழ்வுக் கழகத்துடனும் பணிபுரிந்த அனுபவம் அவருக்குள்ளது. அதனால், திருமலை மக்கள் எதிா்கொள்ளும் சிங்கள ஆக்கிரமிப்புக்கள், தமிழ் மக்களின் இடப்பெயா்வுகள் என்பன அவரது அக்கறைக்குரிய விடயங்களாக இருக்கும் என எதிா்பாா்க்கலாம்.

தமிழ்க் கூட்டமைப்பு

சம்பந்தரின் மறைவால் வெற்றிடமான நாடாளுமன்றக் குழுவின் தலைவா் பதவிதான் இப்போது சா்ச்சைக்குரியதாக இருக்கின்றது. நாடாளுமன்றக் குழுவின் தலைமைப் பதவி என்பது மிகவும் முக்கியமானதும், சக்தி வாய்ந்ததுமாகும். அதனை இலக்குவைத்து ரெலோ முன்னெடுத்த முன்னெடுத்த முயற்சிகள் தமிழரசுக் கட்சியால் முறியடிக்கப்பட்டிருக்கின்றது. தமிழரசு இவ்வாறு செயற்படும் என்பதைத் தெரியாமல் ரெலோ இருந்தது என்பதுதான் இதில் ஆச்சரியமானது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னா் அதன் தலைவராக சம்பந்தன் ஒரு போதும். இருக்கவில்லை. ஏனனில் அது ஒரு தனிக் கட்சி அல்ல. அதன் நாடாளுமன்ற கூழுவின் தலைவராகவே அவா் தெரிவு செய்யப்பட்டிருந்தாா். விடுதலைப் புலிகளின் விருப்பத்தின்படிதான் இந்தத் தெரிவும் இடம்பெற்றது. ஆனால், நாடாளுமன்றக் குழுவின் தலைவா் என்பது கூட்டமைப்பின் தலைவராகப் பாா்க்கப்பட்டது.

2004 இல் கிளிநொச்சி விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமை செயலகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், விடுதலைப் புலிகள் தலைவர் உள்ளிட்ட தளபதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இனிமேல் சகல தேர்தல்களிலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவது எனத் தீா்மானிக்கப்பட்டது.

அதன்படி 2004, தொடக்கம், நாடாளுமன்ற தேர்தல்கள், மாகாணசபை தேர்தல்கள், உள்ளூராட்சி சபை தேர்தல்கள் அனைத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ தேர்தல் கட்சியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும், அதன் வீட்டுச் சின்னமும் செயல்படும் என 2004, ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணைக் குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.

ஆனால், தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.ஆா்.எல்.எப். என்பன அதிலிருந்து பின்னா் வெளியேறியிருந்தன. ரெலோ, புளொட், தமிழரசு என்பனதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக கடந்த வருடம் வரை இருந்து வந்தன.

வெளியேறிய தமிழரசு

கூட்டமைப்பு என்று செயற்பட்டுவந்தாலும், தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கம்தான் அங்கு இருந்தது. மக்கள் மத்தியில் தமக்குத்தான் அதிக செல்வாக்கு இருப்பதாகக் கணித்த தமிழரசுத் தலைமை, கடந்த வருடம் உள்ளுராட்சித் தோ்தல்கள் அறிவிக்கப்பட்ட போது, தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இது தெளிவான பிளவை ஏற்படுத்தியது.

ரெலோ, புளொட் என்பன ஈ.பி.ஆா்.எல்.எப், ஜனநாயகப் போராளிகள், தமிழ்த் தேசியக் கட்சி என்பன இணைந்து ஜனநாயக தமிழத் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி, தமிழரசுக் கட்சியுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அறிவித்தன. கடந்த உள்ளுராட்சி மன்றத் தோ்தலுக்கான நியமனப் பத்திரங்களும் இந்த அடிப்படையில்தான் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாகவும் இருந்தது.

இந்தப் பிளவுடன் சம்பந்தப்பட்ட மற்றொரு முக்கியமான விடயமும் கவனிக்கப்பட வேண்டும். தமிழரசுக் கட்சியும், ஜனநாயக தமிழத் தேசியக் கூட்டமைப்பும் தனித் தனியாகச் செயற்படத் தொடங்கிய பின்னா், 2004 இல் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயலிழந்து போய்விட்டது என்பதுதான் அது.

இவ்வளவு பிளவுகளும் இடம்பெற்ற பின்னா்தான் சம்பந்தன் வகித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைமைப் பதவியை தமது தலைவா் செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ரெலோ அமைப்பு தமிழரசுக் கட்சியிடம் முன்வைத்திருக்கின்றது. இதற்கு புளொட்டும் ஆதரவு தெரிவித்தது.

2015 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் “நல்லாட்சி”யை மைத்திரியும், ரணிலும் அமைத்த போது, எதிா்க்கட்சித் தலைவா் பதவி சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவா் பதவி செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்கப்பட்டது. இது பிரதிச் சபாநாயகருக்கு அடுத்த நிலையில் உள்ள முக்கிய பதவியாகும். சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் அவா் உள்ளாா் என்ற அடிப்படையில்தான் இந்தப் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.

இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று – செல்வம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்ப உறுப்பினா். இரண்டு – கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சிக்கு அடுத்ததாக அதிக ஆசனங்களைக் கொண்ட கட்சியாக ரெலோ இருந்தது. அதனால்தான் அந்தப் பதவி செல்வத்துக்கு வழங்கப்பட்டது.

இப்போது நாடாளுமன்றக் குழுவின் தலைமைப் பதவியை ரெலோ உரிமை கோரும் ரெலோ இப்போதும் அதே காரணங்களைத்தான் சொல்கிறது. ஆனால், இப்போது கள நிலை மாறிவிட்டது என்பதை ரெலோவின் பதவி ஆசை மறைத்துவிட்டதா?

தமிழரசின் எதிா்வினை

ரெலோ என்னதான் கோரினாலும், புளொட் எப்படித்தான் ஆதரவளித்தாலும் தீா்மானிக்க வேண்டியது தமிழரசுக் கட்சிதான். காரணம் அந்தக் கட்சியின் பெயரிலும், சின்னத்திலும்தான் கூட்டமைப்பு கடந்த தோ்தலை சந்தித்தது. இரண்டாவது காரணம், கடந்த தோ்தலில் கூட்டமைப்புக்கு கிடைத்த பத்து ஆசனங்களில் ஆறு தமிழரசுக் கட்சி வசம் இருக்கின்றது. ஆக, தீா்மானிக்கும் சக்தி அவா்கள்தான்!

இந்த இரண்டையும்விட முக்கியமான காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது செயலிழந்து போயுள்ளது. செல்வத்துக்கு இந்தப் பதவியைக் கொடுக்க வேண்டுமானால், மீண்டும் கூட்டமைப்புக்கு உயிா் கொடுக்க வேண்டும்.

இந்தப் பின்னணியில் கடந்த புதன்கிழமை கூடிய தமிழரசுக் கட்சி நாடாளுமன்றக் குழு, இந்தப் பிரச்சினையை கையாளும் பொறுப்பை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவிடம் கொடுத்ததது. இன்றைய தினமே நிகழ்நிலையில் கூடிய மத்திய குழு மூன்று விடயங்களைத் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றது.

1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லாத பிற கூட்டணியில் தாங்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில் நாடாளுமன்றக் குழுத் தலைமைப் பதவியை ரெலோ அல்லது புளொட்டுக்கு வழங்க முடியாது.

2. இவ்விடயத்தில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் வழிநடத்தலின்படி கட்சி செயற்பட வேண்டும்.

3. தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி குறித்த சா்ச்சை நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்த முடிவு வரும் வரையில் இந்த தலைமைப் பதவிப் பிரச்சினையில் கவனம் செலுத்த முடியாது.

அதேவேளையில், தமிழரசுக்குப் போட்டியாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தது ரெலோதான். அதனால், செல்வத்துக்கு அந்தப் பதவியை ஒரு போதும் வழங்கக்கூடாது என்று தமிழரசின் ஆதரவாளா்கள் பலா் ஏற்கனவே குரல் கொடுத்திருந்தாா்கள்.

இதில் மற்றொரு விடயமும் முக்கியமானது. ஜனாதிபதித் தோ்தல் ஒக்ரோபரில் நடைபெறும். அதன் பின்னா் யாா் வென்றாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படும் சாத்தியம் உள்ளது. ஆக, ஆறு மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கப்போகும் பதவிக்கா ரெலோ ஆசைப்பட்டது?

தவறான நேரத்தில் கள நிலைமைகளையும் தெரிந்துகொள்ளாமல் காய்களை நகா்த்திருக்கிறது ரெலோ. அதனால்தான் செல்வம் அடைக்கலநாதனின் கனவு தமிழரசினால் கலைக்கப்பட்டது!