சா்வஜன வாக்கெடுப்பு நடத்தவே ஜனாதிபதி திட்டம் – அநுரகுமார

“பதவிக்காலம் தொடர்பில் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதாக கூறி, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மக்களிடையே சந்தேகம் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தி சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார்” என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அனுரகுமார மேலும் தெரிவிக்கையில், “நிலைமைகளை பார்க்கும் போது செப்டம்பர் 28ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தல் நாட்டின் தீர்மானம் மிக்க தேர்தலே. இந்நிலையில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களா? 5 வருடங்களா? என்ற பிரச்சினையை தீர்க்க அரசியலமைப்பு திருத்தமொன்றை கொண்டு வரவுள்ளதாகவும் இது தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றும், “அரசியலமைப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்கும் உரிமை உயர்நீதிமன்றத்திற்கே இருக்கின்றது. கடந்த காலங்களில் 4 சந்தர்ப்பங்களில் உயர் நீதிமன்றத்தினால் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களே என்று அறிவித்துள்ளது” என்றும் அநுரகுமார சுட்டிக்காட்டினாா்.

“அரசியலமைப்பில் உள்ள தவறுகளை தேடித் தேடி நீதிமன்றம் சென்று தேர்தலை ஒத்தி வைக்க ரணில் முயற்சிக்கின்றார். இந்நிலையில் இப்போது 6 வருடங்களா, 5வருடங்களா? என்ற பிரச்சினை அரசியலமைப்பில் உள்ளதாகவும் இதனால் அதனை 5 ஆக குறிப்பிட்டு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரவுள்ளதாக இப்போது கூறுகின்றனர். ஆனால் குறித்த 83ஆம் சரத்தில் அ பிரிவை நிறைவேற்ற வேண்டுமென்றால் சர்வஜன வாக்கெடுப்பை நேரிடும்” என்று தெரிவித்த அநுதகுமார திசாநாயக்க, “இந்த யோசனை அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை வர்த்தமானியில் அறிவித்து நாடாளுமன்றத்தில் முன்வைத்த பின்னர் எவருக்காவது நீதிமன்றம் செல்லலாம்” என்றும் குறிப்பிட்டாா்.

“பின்னர் உயர்நீதிமன்றத்திற்கு 3 வாரங்கள் அவசியமாகும். பின்னர் அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டில் நிறைவேற்றிய பின்னர், அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்பதனால் ரணில் விக்கிரமசிங்க ஒரு மாதத்திற்குள் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும். இவ்வாறாக நாட்டில் தேர்தல் தொடர்பில் சந்தேகங்களை ஏற்படுத்தவும், குழப்பங்களை ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றார். அவர்களே போட்டியிடுவதா? இல்லையா? என்ற குழப்ப நிலைக்கு மத்தியில் மக்களையும் குழப்பத்திற்குள் தள்ள
முயற்சிக்கின்றார்கள். ஆனால் உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்ட ஆகவேண்டும்” என்றும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தாா்.