தோ்தல் ஆணைக்குழு இன்னமும் காத்திருப்பது எதற்காக? லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி

“ஜனாதிபதித் தோ்தல் தொடர்பான அறிவித்தலை வெளியிடுவதற்கு அதிகாரம் கிடைத்தும் அந்த அறிவித்தலை வெளியிடாது தேர்தல்கள் ஆணைக்குழு காத்திருப்பதானது தேர்தலை ஒத்திவைப்பதற்காக அரசாங்கத்திற்கு காலத்தை வழங்கும் நோக்கத்தை கொண்டதாக இருக்கலாம்” என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில், “கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் எந்த விடயமும் முன்வைக்கப்படவில்லை. ஆனால் அடுத்த வாரத்தில் சிலவேளை அரசியலமைப்பு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படலாம். இந்நிலையில் ஜுலை 17ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு ஜனாதிபதித் தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தாா்.

”ஆனால் அதனை அறிவிக்க ஏன் மாதக் கடைசி வரையில் இழுக்க வேண்டும். 17ஆம் திகதியை கடந்தும் ஏன் இன்னும் 10 12 நாட்களுக்கு காத்திருக்க வேண்டும்” என்றும் கேள்வி எழுப்பிய லக்ஷ்மன் கிரியெல்ல, “இதில் ஒரு விடயம் தெளிவாகின்றது. அதாவது அரசாங்கத்திற்கு விளையாட காலம் வழங்கப்படுகின்றது. அடுத்த வாரத்தில் நாடாளுமன்ற அமர்வு நடக்கவுள்ளது. அதனுடாக விளையாட்டை காட்டுவர்” என்று தெரிவித்தாா்.

“இதேவேளை அரசியலமைப்பில் புதிய சரத்தை உருவாக்கி நல்ல நேரம் பார்த்து தினத்தை தீர்மானிப்பதாக தேர்தல் அதிகாரி கூறுகின்றார். அரசாங்கத்திற்கு காலத்தை வழங்கும் சம்பிரதாயம் கிடையாது. இந்த முயற்சியின் பின்னால் அரசாங்கத்திற்கு காலம் வழங்குவதே நடக்கின்றது. திரைக்கு பின்னலே வேலைகள் நடக்கின்றன. வெளியில் தெரிவதற்கு மட்டுமே விரைவாக தேர்தல் நடத்துமாறு கூறுகின்றனர்” என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தாா்.