சாவகச்சேரி மருத்துவமனை விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

chavakacheri hospitel சாவகச்சேரி மருத்துவமனை விவகாரம் - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைவிஷக் கடியால் பாதிக்கப்பட்ட ஒருவரை சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு சிகிச்சை வழங்குவதற்கு யாரும் இருக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டிருப்பது தொடா்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்ப்பாண பிராந்திய பணிமனை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் இதுபற்றித் தெரிவித்தார்.

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் கடந்த 17ஆம் திகதி இரவு விஷக்கடிக்கு உள்ளான தனது தந்தையை சிகிச்சைக்காக கொண்டு சென்ற வேளையில் மருத்துவமனையில் மருத்துவர்களோ, தாதியர்களோ இருக்கவில்லை. யாரும் அங்கு இல்லாததால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமைனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஒருவர் தெரிவித்தமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த செய்தி 1996 ஆம் ஆண்டு 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14 இற்கு அமைய, ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக பதிவு செய்யப்பட்டு சாவகச்சரி ஆதார மருத்துவமனையின் பதில் மருத்துவ அத்தியட்சகர், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆகியோரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த விளக்க அறிக்கையை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னர் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.