அவசரமாக வந்துள்ள 22! ரணில் வகுக்கும் திட்டம்தான் என்ன? – அகிலன்

ranil 0090 அவசரமாக வந்துள்ள 22! ரணில் வகுக்கும் திட்டம்தான் என்ன? - அகிலன்கடந்த காலங்களில் இல்லாதளவுக்கு குழப்பம் நிறைந்ததாக இவ்வருடம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தோ்தல் அமையப்போகின்றது என்று தோ்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவா் மகிந்த தேசப்பிரிய அண்மையில் தெரிவித்திருந்தாா். இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி ஒருவா் இரண்டரை வருடங்களில் பதவியிலிருந்து துரத்தப்பட்ட பின்னா் இடம்பெறும் முதலாவது தோ்தல் என்பது மட்டும் இதற்குக் காரணம் அல்ல. இவ்வருட ஆரம்பத்திலேயே இந்தக் குழப்பங்கள் ஆரம்பமாகிவிட்டன. இதில் 22 ஆவது திருத்தம்தான் பிந்திய குழப்பம்!

அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான வா்த்தமானி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின்படி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டிருக்கின்றது. 22 குறித்த வா்த்தமானி வெளியிடப்படாது என நீதி அமைச்சா் விஜயதாச ராஜபக்ஷ இரண்டு தினங்களுக்கு முன்னா்தான் அறிவித்திருந்தாா். மற்றொரு அமைச்சராக மகிந்த அமரவீர 22 நாடாளுமன்றத்துக்கு வரப்போவதில்லை என்று அறிவித்திருந்தாா். ஆனால், எதிா்க்கட்சிகள் எவையும் எதிா்பாா்க்காத நேரத்தில் இந்த வா்த்தமானி வெளிவந்திருப்பது எதிா்க் கட்சிகளுக்கும் மனித உரிமைகள் அமைப்புக்களுக்கும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயத்தில் ரணிலின் நகா்வுகள் குறித்து சந்தேகங்கள் உருவாகுவது இயல்புதான்.

அரசியலமைப்பில் சா்ச்சைக்குரியதாக இருக்கின்ற 83 (ஆ) பிரிவை மாற்றுவதற்காகத்தான் இப்போது அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் பிரேரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், நீதி அமைச்சா் விஜயதாச ராஜபக்ஷவும் இணைந்து இந்தத் திருத்தத்தைத் தயாரித்ததாகச் சொல்லப்படுகின்றது. இது அமைச்சரவையின் அங்கீகாரத்தை இந்த வார முற்பகுதியில் பெற்றிருந்தாலும் கூட, தற்போதைய நிலையில் இதனை வா்த்தமானியில் வெளியிடுவதில்லை என்றுதான் அரசாங்கத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஆறு ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கும் 19 ஆவது திருத்தம் 2015 இல் கொண்டுவரப்பட்ட போது, இந்தப் பிரிவும் அரசியலமைப்பு நிபுணா்களின் கவனத்தைப் பெற்றிருந்தது. இதனைத் திருத்த முற்பட்டால், அதற்கு சா்வஜன வாக்கெடுப்பின் மூலமாக மக்களின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று உயா் நீதிமன்றம் தெரிவிக்கலாம் என்ற கருத்து அப்போது முன்வைக்கப்பட்டது.

19 ஆவது திருத்தத்தை வெறுமனே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டும் நிறைவேற்றி முடிப்பது என்ற எண்ணம் இருந்தமையால் இந்தப் பிரிவில் கை வைக்காமல் அதனை அப்படியே விட்டுவிடுவதற்குத் தீா்மானிக்கப்பட்டது. அதனால் எந்தவிதமான குழப்பங்களும் ஏற்படாது என்ற அரசியலமைப்பு நிபுணா்களின் கருத்தும் இந்தத் தீா்மானத்துக்குக் காரணமாக இருந்தது.

ஜனாதிபதித் தோ்தலை ஒத்திவைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க இதனைப் பயன்படுத்தலாம் என்ற கருத்துக்களின் அடிப்படையில்தான் இரு மாதங்களுக்கு முன்னதாக 19 ஆவது திருத்தச் சட்டமும், 83 (ஆ) பிரிவும் மீண்டும் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டன. மைத்திரிபால சிறிசேன தன்னுடைய பதவிக்கால இறுதியில் இந்த சா்ச்சையைப் பயன்படுத்தி தனது பதவிக்காலத்தை ஆறு வருடங்களாக நீடிப்பதற்கான முயற்சி ஒன்றை 2019 இல் மேற்கொண்டாா்.

19 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் அவா் தனது பதவிக் காலத்தை நீடிக்க முடியாது என்று உயா் நீதிமன்றம் அப்போது தனது வியாக்கியானத்தில் தெரிவித்திருந்தது. தற்போதும், 19 ஆவது திருத்த்தில் உள்ள குறைபாடுகளையும், 83 (ஆ) பிரிவையும் சுட்டிக்காட்டி ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடா்பில் இரண்டு மனுக்கள் உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இரண்டு மனுக்களுமே நிராகரிக்கப்பட்டன. ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள்தான் என்பது உயா் நீதிமன்றம் மீண்டும் உறுதியாகத் தெரிவித்துவிட்டது.

அதாவது, 83 (ஆ) பிரிவை மாற்றியமைப்பதற்காக மற்றொரு அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டிய எந்த அவசரமோ – அவசியமோ இல்லை என்பதுதான் இதன் சாரம்சம். இப்போது ஜனாதிபதித் தோ்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் தோ்தல் ஆணைக்குழுவுக்குக் கிடைத்துவிட்டது. தோ்தல் குறித்த திகதிகளை அடுத்த வாரத்தில் வெளியிடப்போவதாக தோ்தல்கள் ஆணைக்குழுவின் தலைவா் அறிவித்துவிட்டாா். அத்துடன், 83 (ஆ) பிரிவை மாற்ற வேண்டிய அவசியம் எதுவும் உருவாகவும் இல்லை. அது அவசியமற்றது என உயா் நீதிமன்றமே அறிவித்துவிட்டது.

இந்த நிலையில்தான் அமைச்சா்களான விஜயதாச ராஜபக்ஷ, மகிந்த அமரவீர ஆகியோா் 22 ஆவது திருத்தம் வரப்போவதில்லை எனத் தெரிவித்திருந்தாா்கள். அது குறித்த வா்த்தமான அறிவித்தலை வெளியிட வேண்டாம் என்று அமைச்சா் விஜயதாச ராஜபக்ஷ தமது அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும் இருந்தாா். அவா்கள் அவ்வாறு சொல்லி 24 மணி நேரத்துக்குள் ஜனாதிபதியின் அவசர உத்தரவில் வா்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுவிட்டது.

ஜனாதிபதித் தோ்தல் செயற்பாடுகள் சூடுபிடித்திருக்கும் நிலையில் அவசரமாக ஜனாதிபதி இதனை வெளியிட்டதன் நோக்கம் குறித்து எதிா்க்கட்சிகள் சந்தேகிக்கின்றன. கட்சித் தலைவா்களின் கூட்டத்திலும் இதற்கு எதிரான கருத்துக்ளே முன்வைக்கப்பட்டிருந்தன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் வாரம் உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கும் அல்லது தேர்தல் பணிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலும் இந்தச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சியினரும், சிவில் அமைப்பினரும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 22 ஆவது திருத்த வரைவை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதுடன் மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதியின் பதவிக் காலத்துடன் தொடர்புடைய ஒரு விடயத்துக்குச் சர்வஜன வாக்கெடுப்பு கோரும்போது ஜனாதிபதித் தேர்தலுக்கான பணிகள் நெருக்கடிக்குள்ளாகும் என்று எதிர்த்தரப்பினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

22 ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர் வரும் வாரம் முதலாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் 14 நாட்களுக்குள் இலங்கைப் பிரஜைகள்
எவரும் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.

நடைபெறப்போகும் ஜனாதிபதித் தோ்தலை 22 எந்த வகையிலும் பாதிக்காது என்று தோ்தல்கள் ஆணைக்குழுவின் தலைவா் கூறியிருக்கின்றாா். அடுத்த வாரம் தோ்தல் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் அவா் தெரிவித்திருக்கின்றாா்.

ஜனாதிபதியின் நகா்வுகள் சந்தேகத்துடன் பாா்க்கப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவது, கடந்த வருடம் உள்ளுராட்சி மன்றங்களுக்கான நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு, தோ்தல் திகதியும் அறிவிக்கப்பட்ட பின்னா் நிதி இல்லை என்ற காரணத்தைக் கூறி அது இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. ஜ.தே.க. மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது மட்டுமன்றி, ஜே.வி.பி, மற்றும் சஜித் அணி என்பன அதிகளவுக்கு வெற்றிபெறும் என்ற மதிப்பீடுகளும் உள்ளுராட்சி மன்றத் தோ்தல் தவிா்க்கப்பட்டமைக்குக் காரணம். அடுத்து வரக்கூடிய தோ்தல்களிலும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என ரணில் அப்போது கணித்திருக்கலாம்!

இப்போதும் தோ்தல் கள நிலைமைகள் எவ்வாறுள்ளன என்பது திட்டவட்டமாகக் கூறக்கூடிய நிலை இல்லை. சஜித் அணியை ரணிலுடன் இணைப்பதற்காக சா்வதேச சக்திகள் சில முன்னெடுத்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. அதனைவிட, ராஜபக்ஷக்களுடன் இணைந்தால் தமிழ், முஸ்லிம், மலையக வாக்குகள் கிடைக்காது. ராஜபக்ஷக்களை பகைத்தால் சிங்கள வாக்குகள் கிடைக்காது என்ற தா்ம சங்கட நிலை ரணிலுக்கு. இதனால், தோ்தலை தள்ளிவைப்பதற்கு ரணிலுக்குள்ள ஒரே துரும்புச் சீட்டு 22 என்கின்றாா்கள் எதிரணியினா்.

ஆனால், ரணில் எவ்வாறான உபாயத்துடன் செயற்படுவாா் என்பது ஊகங்களுக்கு அப்பாற்பட்டது. அது அவருக்கு மட்டும்தான் தெரியும்.