சிங்கள – பௌத்த பேரினவாதத்தை எதிா்ப்பதில் எமக்குப் பெரும் தோல்வி – சிறிதரன்

sritharan சிங்கள - பௌத்த பேரினவாதத்தை எதிா்ப்பதில் எமக்குப் பெரும் தோல்வி - சிறிதரன்அடிப்படை விருப்புகளைக் கோருகின்ற எமது அரசியல் உரிமையின் மீது போர்தொடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை தமிழ்த் தேசியம் என்னும் ஓர் குடையின் கீழ் நின்று கூட்டாய் எதிர்க்கும் திராணியை உருவாக்குவதில் தான் ஈழத்தமிழினம் இன்று பெருந்தோல்வியைச் சந்தித்திருக்கிறது என்று தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் சிவஞானம் சிறிதரன், இப்போது நம் இனத்துக்கு இருக்கும் மிகப்பெரிய இடைவெளி ஆதர்சனத் தலைமையற்ற தன்மையே என்றும் சுட்டிக் காட்டினார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மகாநாடு யாழ் தந்தை செல்வா கலையரங்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றபோது அதில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சிவஞானம் சிறிதரன், “ஈழத் தமிழினத்தின் இறையாண்மையை வேண்டி நாங்கள் மேற்கொள்ளும் அறவழிப் போராட்டங்களையும் அபிலாசை வெளிப்பாடுகளையும் சிங்கள தேசம் எப்போது புரிந்துகொள்ளத் தலைப்படுகிறதோ அப்போதுதான் அர்த்தம் மிகுந்த இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும்” என்றும் தெரிவித்தாா்.

9 4 சிங்கள - பௌத்த பேரினவாதத்தை எதிா்ப்பதில் எமக்குப் பெரும் தோல்வி - சிறிதரன்“அரச இயந்திரத்தின் கொள்கை வகுப்பினையும் இனவாத நோக்கில் கட்டமைக்கப்பட்ட அதிகார பீடங்களின் செயல்முறைகளையும் நாங்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதில் தெளிவுற்றுள்ள போதும் அடிப்படை விருப்புகளைக் கோருகின்ற எமது அரசியல் உரிமையின் மீது போர்தொடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை தமிழ்த்தேசியம் என்னும் ஓர் குடையின் கீழ் நின்று கூட்டாய் எதிர்க்கும் திராணியை உருவாக்குவதில் தான் ஈழத்தமிழினம் இன்று பெருந்தோல்வியைச் சந்தித்திருக்கிறது” என்றும் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தாா்.

தொடா்ந்து உரையாற்றிய சிவஞானம் சிறிதரன், “இந்த நெருக்கடியை எளிதாகக் கையாள்வதாயின் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் புலத்திலிருந்தவாறு இனத்தின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் உறவுகளும் ஒருங்குசேர தம் அரசியற் பயணத்தை முன்கொண்டு செல்வதற்கான எதிர்கால வழி வரைபடம் ஒன்றையும் அதுசார் கொள்கை வகுப்புகளையும் உருவாக்க வேண்டும்” என்றும் அவா் வலியுறுத்தினாா்.