ஜனாதிபதித் தோ்தலில் களமிறங்குகின்றாரா நாமல்? ரணிலுடன் நடைபெற்ற காராசாரமான சந்திப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாகவும் இதனால் பொதுஜன பெரமுனவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நாமல் ராஜபக்ஷவிற்கு இடையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு விசேடகலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜனாதிபதியினால் நாமல் ராஜபக்ஷவிற்கு கிடைத்த அழைப்பின் பிரகாரம் இந்தக் கலந்துரையாடல் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாமல் ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி வினவியதாகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுவை சமர்பிக்கவுள்ளதாக நாமல் ராஜபக்ஷ நேரடியாக ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதனால் இருவருக்கிடையிலான விவாதம் சூடுபிடித்திருந்ததாகவும் அறியமுடிகின்றது. இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாமல் ராஜபக்ஷவுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடவில்லை. மேலும்
ராஜபக்ஷ குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாட ஏற்பாடு செய்திருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு தெரிவிப்பதற்கு நாமல் ராஜபக்ஷ தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கட்சி சார்பாக வேட்பாளரை நிறுத்தும் யோசனைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை வேட்பாளராக நிறுத்துவதற்கு கட்சியில் பலர் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

எனினும் அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து நேரடியாக போட்டியிடுவது தொடர்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. தற்போதைய நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த மூவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்போட்டியிடுவதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.