பொது ஜன பெமுனவுடன் ஜனாதிபதி ரணில் தொடா்ந்து பேச்சு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளன.

தொடர்ந்து இடம்பெற உள்ள இந்தக் கலந்துரையாடல்களின் முடிவுகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்க இருதரப்பினரும் இணக்கப்பாடுகளை எட்டியுள்ளனர்.

அதன் பிரகாரம் ஆளுங்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நிச்சயமாக இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படுவார். இணக்கப்பாடுகள் எட்டப்படாவிடின் பொதுஜன பெரமுன தனித்து வேட்பாளர் ஒருவரை களமிறக்க ஏற்கனவே தீர்மானம் எடுத்துவிட்டது.

வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவை வேட்பாளராக களமிறக்க அக்கட்சி முடிவுகளை எட்டியுள்ளது. இதேவேளை, ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டுமென்ற முக்கிய நிபந்தனை ரணில் விக்ரமசிங்கவுக்கு விதிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.

அத்துடன், இக்கலந்துரையாடலில் பொருளாதாரம் மற்றும் பொதுஜன பெரமுனவின் கொள்கை தொடர்பிலான பல விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், கடனை செலுத்தி நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரு தலைவரை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்பதே பொதுஜன பெரமுனவின் தீர்மானமாக உள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.