வாக்கெடுப்புக்குச் செல்லாது 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அரசாங்கம் திட்டம்?

வாக்கெடுப்புக்கு செல்லாது 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றும் திட்டம் அரசாங்கத்திடம் உள்ளது என்றும், அவ்வாறு நிறைவேற்றுவதற்கு இடமளிக்காது அதனை தோற்கடிக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துறு ஹெல உறுமய கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.

உதய கம்மன்பில மேலும் தெரிவித்தபோது, அரசியலமைப்பின் 30 (2)ஆம் பிரிவு திருத்தப்பட்ட போதே ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாக குறைக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் 83 (ஆ) பிரிவு திருத்தப்படாவிட்டாலும் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களே ஆகும். அதனை பல சந்தர்ப்பங்களில் உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. 83 (ஆ) சரத்தை திருத்த வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமாகும் என்பதனாலேயே அப்போது 19 ஆவது திருத்தத்தை தயாரித்தவர்கள் அதனை திருத்தவில்லை” என்று சுட்டிக்காட்டினாா்.

உதய கம்மன்பில மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இப்போது சர்வஜன வாக்கெடுப்பு இன்றி 83 (ஆ) சரத்தை திருத்த அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுக்கின்றது. ஆனால் சர்வஜன வாக்கெடுப்புடனேயே அதனை நிறைவேற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் ஊடாக தீர்ப்பை பெற்றுக்கொள்ள நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என்றும், “22ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற விடாது அதனை தோற்கடிக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தாா்.

“எதிர்க்கட்சியிலுள்ள 30 பேரின் ஆதரவு இன்றி அரசாங்கத்தினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும். எவ்வாறாயினும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் மீறி நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றி அதில் சபாநாயகரின் கையொப்பம் பெற்றுக்கொள்ளப்பட்டது” என்பதைச் சுட்டிக்காட்டிய உதய கம்மன்பில, “இதனால் அப்பாவி போன்ற 22ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் சபாநாயகர் கையெழுத்திட முன்னர் இதில் என்ன என்ன விடயங்களை புகுத்துவார்களோ தெரியாது. அவ்வாறு நடந்தால் அதனை மாற்ற பின்னர் வழியிருக்காது. வெற்று காசோலையில் கையெழுத்திடுவது போன்றதுதான் இந்த விடயமும் இருக்கும் என்றும் தெரிவித்தாா்.