கறுப்பு ஜுலை- பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை: சமூகப்பிரதிநிதிகள் சுட்டிக்காட்டு

தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜுலை கலவரங்கள் அரங்கேறி 41 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை என சமூகப்பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட ‘கறுப்பு ஜுலை’ கலவரங்கள் அரங்கேறி இன்றுடன் (23) 41 வருடங்கள் கடந்திருக்கின்றன. தமிழர்கள் மத்தியில் மிகமோசமான தாக்கத்தையும், தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்பங்களையும் ஏற்படுத்திய இக்கலவரங்கள் தொடர்பில் இன்னமும் நீதியோ, பொறுப்புக்கூறலோ உறுதிசெய்யப்படவில்லை.

இந்நிலையில் கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதுடன், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும் என வலியுறுத்தி வடக்கு – தெற்கு சகோதரத்துவம் எனும் அமைப்பினால்  கொழும்பு, பொரளை கனத்தை பொதுமயானத்துக்கு முன்பாக உள்ள சுற்றுவட்டத்தில் ‘மீண்டுமொரு கறுப்பு ஜுலை வேண்டாம்’ எனும் தொனிப்பொருளில் நினைவுகூரல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த வடக்கு – தெற்கு சகோதரத்துவம் அமைப்பின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் ‘தமிழ்மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை மறவோம்’, ‘இனப்படுகொலைக்கு நீதி வழங்கு’ எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இங்கு கருத்து வெளியிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஸ்ரீநாத் பெரேரா, வடக்கில் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமையை அடுத்து, கொழும்பில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட மிகக்கொடூரமான வன்முறைகளை நினைவுகூர்ந்தார். அத்தோடு இந்நாட்டில் மீண்டுமொரு கறுப்பு ஜுலை கலவரங்கள் ஏற்படக்கூடாது என்பதை முன்னிறுத்தியே இந்த நினைவுகூரல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் தற்போதும் தமிழர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடரும் நிலையில், அவற்றைக் களைந்து அவர்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு இடமளிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

அதேபோன்று கறுப்பு ஜுலை கலவரங்கள் ஆரம்பமான தினத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் பெரும் எண்ணிக்கையான தமிழ் கைதிகள் கொல்லப்பட்டமை குறித்து சுட்டிக்காட்டிய அவர், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி நிலைநாட்டப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார்.

அதேவேளை அங்கு கருத்துரைத்த அரசியல் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், சிவில் செயற்பாட்டாளருமான அருட்தந்தை சக்திவேல், யாழ் நூலக எரிப்பு, கறுப்பு ஜுலை கலவரங்கள் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் குறித்து சுட்டிக்காட்டியதுடன், இன்னமும் இந்நாட்டில் தமிழ்மக்கள் அமைதியாக வாழ்வதற்கான சூழல் உறுதிசெய்யப்படவில்லை என விசனம் வெளியிட்டார். அதுமாத்திரமன்றி ஞானசார தேரருக்கும், ஹிருணிகா பிரேமசந்திரவுக்கும் பிணை வழங்கமுடியுமெனில், பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்கமுடியாது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.