நிலச்சரிவு: எத்தியோப்பியாவில் 229 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த திங்கட்கிழமை அன்று கனமழை பொழிந்தது. இதையடுத்து அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 229 பொது மக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணி தொடர்கின்றது.

இந்த சம்பவத்துக்கு பிறகு அங்கு குவிந்த மக்கள் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க முயற்சிகளை மேற்கொண்டனர். இது தொடர்பான படங்களை அந்த நாட்டின் உள்ளூர் நிர்வாகம் பகிர்ந்துள்ளது.

நிலச்சரிவில் இருந்து ஐந்து பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கோஃபா மண்டலத்தில் கெஞ்சோ-ஷாச்சா பகுதியில் இந்த பேரிடர் சம்பவம் நடந்துள்ளது.

திங்கட்கிழமை அன்று நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு சிக்கி இருந்தவர்களை மீட்க சென்றவர்கள் மீது இரண்டாவது முறையாக மண் சரிந்த காரணத்தால் அதில் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. சுமார் 500 வீடுகளுக்கு செஞ்சிலுவை சங்கம் நிவாரண உதவி பொருட்களை அனுப்பியுள்ளது. உணவு, மருந்து மற்றும் தண்ணீர் போன்றவை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடாக எத்தியோப்பியா உள்ளது. மொத்தம் 120 மில்லியன் மக்கள் அங்கு வசிக்கின்றனர். வெள்ளம் மற்றும் வறட்சி என காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் இந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர். தெற்கு எத்தியோப்பியாவில் ஏப்ரல் மற்றும் மே மாதம் மழை காலமாக உள்ளது. அந்த நேரத்தில் இந்த பகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதும், அதனால் மக்கள் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து அரங்கேறி வருவதாக தெரிகிறது.