அமைச்சா் பதவியைத் துறக்கத் தயாராகின்றாா் விஜயதாச? இன்று அறிவிப்பாா்

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, இன்று வியாழக்கிழமை விசேட அறிவித்தலொன்றை வெளியிடவுள்ளார்.

கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ள அவர், அந்த நிகழ்வில் விசேட அறிவித்தலை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அண்மைக் காலமாக விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்து வந்த நிலையில், இன்றைய தினத்தில் அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அவர் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியின் வேட்பாளராக விஜேதாச ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக அண்மைக்காலமாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அந்தக் கட்சிக்குள் நிலவும் முரண்பாட்டு நிலைமைகளால் அந்தக் கட்சியின் வேட்பாளராக அன்றி எதிர்க்கட்சிகள் சில இணைந்து அமைக்கவுள்ள புதிய கூட்டணி ஊடாக அவர் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை அவா் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதால் அமைச்சுப் பதவியை துறந்து அரசாங்கத்தில் இருந்து வெளியேற தீர்மானமெடுக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.