‘திருடப்பட்ட அனைத்து பணத்தையும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்’:சஜித் பிரேமதாச

எமது அரசாங்கத்தில் நாட்டை சீரழித்த அனைவரையும் சட்டத்துக்கு முன் கொண்டுவருவதுடன் திருடப்பட்ட அனைத்து பணத்தையும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்போம். நாட்டை வங்குராேத்து அடையச்செய்தவர்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதாலே நாங்கள் அப்போது நாட்டை பொறுப்பெடுக்க முன்வரவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தை வங்குராேத்து அடையச் செய்தவர்கள், தற்போது எங்களுக்கு தர்ம போதனை செய்கிறார்கள். எங்களுக்கு போதனை செய்வதற்கு முன்னர் தரமத்தின் பிரகாரம் அவர்கள் முதலாது செயற்பட வேண்டும். பொருளாதார சவாலை ஏற்றுக்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்த சவால் நிலையை ஏற்படுத்தியவர்கள் யார். கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையிலான அரசாங்கத்தின் பிழையான, முட்டாள்தனமான தீர்மானங்கள் காரணமாகவே நாடு வங்குராேத்து நிலைக்கு சென்றது.

நாட்டை வங்குரோத்து அடையச் செய்து நாட்டை சீரழித்த திருடர்களுடன் இணைந்து  நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் முன்வராதமை நாங்கள் செய்த பாவம்  என இவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த பாவத்தை சுமக்க நாங்கள் விருப்பம். ஆனால் பொருளாதாரத்தை வீழ்ச்சியடை காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இவர்கள் மறந்துள்ளனர். கோத்தாபய ராஜபக்ஷ், பசில் ராஜபக்ஷ், மஹிந்த ராஜபக்ஷ், எஸ்.ஆர். ஆட்டிகல, பீ,பீ. ஜயசுந்தர உள்ளிட்ட குழுவினர் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

மேலும் நாங்கள் மக்கள் ஆணை ஒன்றை பெற்றுக்கொண்டு, சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை, மக்கள் நலனுக்காக மீள் பரிசீலனைக்கு செல்வோம். நாணய நிதியத்துடன் மிகவும் சிநேகபூர்வமான முறையில் இதுதொடர்பில் நடவடிக்கை எடுப்போம் நிச்சியமாக அந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம். இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய மாற்றுத்திட்டம் இருப்பது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்காகும். வங்குராேத்து அடைந்துள்ள நாட்டில் ஊழல் மோசடி செய்தும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை இழுத்துக்கொள்வதற்கு மதுபானசாலை அனுமதி பத்திரம் வழங்கும் இவர்களுக்கு நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

அதனால் நாங்கள் நாட்டை கட்டியெழுப்ப முடியுமான  அனைத்து துறைகளையும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுப்போம். அரசாங்கம் தற்போது சமர்ப்பித்துள்ள பொருளாதார நிலைமாற்றம் சட்டத்தில் முழுமையான இணக்கப்பாடு எமக்கு இல்லை. அதனால் எமது ஆட்சியில் இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வோம். அதேபோன்று நாட்டை சீரழித்த அனைவரையும் சட்டத்துக்கு முன்கொண்டுவருவோம். நாட்டில் திருடிய அனைத்து பணத்தையும் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவோம் என்ற உறுதியை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கிறோம் என்றார்.